சேலம்
கடந்த 7 ஆண்டுகளாக செயல்படாத விமான நிலையம் இன்று மீண்டும் சேவையை தொடங்கி உள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு சேலத்தில் 6.2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விமான நிலையம் திறக்கப்பட்டது. அப்போது என் இ பி சி விமான நிறுவனம் விமான சேவையை நடத்தி வந்தது. ஒரு நபருக்கு ரூ.3000 கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொதுமக்களிடையே இந்தக் கட்டணம் அதிகம் என்னும் கருத்து இருந்ததால் ஆர்வம் குறைந்து காணப்பட்டது.
அதைத் தொடர்ந்து பொதுமக்களின் வரவேற்பு இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 7 ஆண்டுகளாக விமான நிலையம் செயல்படாமல் இருந்தது. தற்போது ட்ருஜெட் விமான நிறுவனம் தனது சேவையை அளிக்க முன் வந்துள்ளது. தற்போது பயணக்கட்டணம் ஒரு நபருக்கு ரூ.1499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
72 பேர் அமரக்கூடிய சிறிய விமானத்துடன் இன்று சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது. சென்னையில் இருந்து காலை 9.50க்கு கிளம்பும் விமானம் 10.40 க்கு சேலத்து வந்து சேருகிறது. சேலத்தில் இருந்து 11 மணிக்கு கிளம்பும் விமானம் சென்னைக்கு 11.50 க்கு வந்து சேருகிறது.
இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் கலந்துக் கொள்ளும் நிகழ்வில் இந்த சேவை தொடங்கப்படுகிறது.