தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும், அதை மூடக் கோரியும் நடைபெறும் போராட்டம் வலுத்து வருகின்றனது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருவது தெரிந்ததே. இந்நிலையில் அந்த ஆலையை மேலும் விரிவாக்க திட்டம் தீட்டியுள்ளதாக செய்திகள் வந்தன. அந்த ஆலை தொடர்ந்து செயல்பட்டு வந்தால் தூத்துக்குடி பாழாகும் எனவும் மக்கள் வாழத் தகுதி அற்ற ஊராக மாறி விடும் எனவும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த மாதம் 5ஆம் தேதி அன்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி கிராம மக்கள் 12ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர். சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகே நிகழ்ந்த சென்ற மாதம் பிப்ரவரி 12ஆம் தேதி இந்த போராட்டம் நிகழ்ந்தது. அதை தொடர்ந்து அன்றே எம் ஜி ஆர் பூங்கா முன்பு விடிய விடிய போராட்டத்தை மக்கள் நிகழ்த்தினர்.
அடுத்த நாள் பிப்ரவர் 13ஆம் தேதி ஆர்ப்பாட்டம் செய்த கிராமத்தினரில் 231 பேர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பொதுமக்கள் நேற்று கடையடைப்பு போராட்டம் நிகழ்த்தினர். சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ஆண்கள், பெண்கள் , மற்றும் குழந்தைகள் என 20000 க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த ஜெயராமன், “தூத்துக்குடியில் ஏற்கனவே காற்று மாசுபாடு அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் செம்பு ஆலையால் இந்த மாசு மேலும் அதிகரிக்கும். செம்பு ஆலைகள் அதிகம் மாசுபடுத்தக் கூடியவையாகும். அவைகளால் காற்று மட்டுமின்றி நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் உண்டு. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். மக்களின் குடிநீர் ஆதாரங்கள் பாழாகும்” என தெரிவித்துள்ளார்.