சென்னை

பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகன் மற்றும் பூனாச்சி ஆகிய நாவல்களை வெளியிடும் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கி உள்ளது.

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவல் கடுமையான சர்ச்சைக்கு உள்ளாகியது.  திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் ‘மாதொருபாகன்’ நாவலின் பிரதிகளைச் கடந்த 2015 ஆம் வருடம் எரித்துப் போராட்டம் நடத்தின. எழுத்தாளர் பெருமாள்முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.   கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

அதன் பிறகு நிதிமன்றம் பேச்சுரிமையையும் கருத்துரிமையையும் பறிக்கிறது எனக் கூறி பெருமாள் முருகன் எழுத்துலகை விட்டு விலகினார்.    இலக்கியவாதிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மாதொருபாகன் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு நாவல் ஆகும்.   அத்துடன் பெருமாள் முருகன் எழுதிய பூனாச்சி என்னும் நாவலும் நல்ல வரவேற்பைப் பெற்ற நாவல் ஆகும்.   சில சாதி அமைப்புகளின் மிரட்டலினால் தற்போது பெருமாள் முருகன் சென்னையில் வசித்து வருகிறார்.

பெருமாள் முருகனின் மாதொரு பாகன் மர்றும் பூனாச்சி ஆகிய இரு நாவல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகெங்கும் வெளியிடும் உரிமையை தற்போது அமெரிக்க பதிப்பு நிறுவனம் குரோவ்/அட்லாண்டிக் வாங்கி உள்ளது.     ஏற்கனவே இந்த நாவல்கள் ஜெர்மன், செக், மற்றும் பிரஞ்சு மொழிகளில் வெளியிடும் உரிமையை இந்த நாவல்களின் பதிப்பாளர் அளித்துள்ளார்.

இது குறித்து பெருமாள் முருகன், “இந்த ஒப்பந்தத்தினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.   தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ஹ்ட போதிலும் பல பிரம்மாண்டமான தமிழ்ப் படைப்புகள் மொழி பெயர்க்கப் படவில்லை.  அதிலும் நவீன இலக்கியங்கள் எதுவுமே மொழி பெயர்க்கப் படவில்லை.  அதற்கு இது ஒரு தொடக்கமாக விளங்கும்”  என தெரிவித்துள்ளார்.