பேஸ்புக் இணையதளத்தில் தகவல் திருட்டு விவகாரம் சர்ச்சையாகி உள்ளநிலையில் ”தவறு நடந்து விட்டது” பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2016ம் வருடம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் உள்ள ஐந்து கோடி வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக பிரபல பிரிட்டன் தொலைக்காட்சி சேனல் நியூஸ் 4 -ல் செய்தி வெளியானது.
‘Psychographic Modeling technique’ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் தகவல்கள் திருடப்பட்டதாகவும், இதனை டொனால்டு டிரம்ப் அரசியல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த தகவல் வெளியானவுடன்ன், பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு சுமார் 7% சரிவை சந்தித்தது. இதனால், நேற்று ஒரே நாளில் அந்நிறுவனத்தின் மதிப்பில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி சரிவு ஏற்பட்டது. பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு இதனால், சுமார் ரூ.39,000 கோடி சரிந்தது.
இந்தியாவிலும் இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் விதிகளை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்கிற்கு சம்மன் அனுப்புவோம் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
உலகம் முழுவதும் எழுந்துள்ள நெருக்கடி, பேஸ்புக் நிறுவனத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது மவுனத்தை கலைத்துள்ள பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க், தவறு நடந்துவிட்டதாக, வருத்தம் தெரிவித்துள்ளார் மார்க்.
மேலும், “எதிர்காலத்தில் இது போன்ற தகவல் திருட்டை பேஸ்புக் சகித்துக்கொள்ளாது. கேம்பிரிட்ஜ் அனலடிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை பேஸ்புக் நிறுவனம் தணிக்கை செய்யும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம்” என்றும் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது பேஸ்புக் பக்கத்தில் மார்க் சூகர்பெர்க் வெளியிட்டு இருக்கிறார்.