பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவ்வப்போது கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

ஏற்கனவே 2 கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ள ராகுல், தற்போது 3வது கட்ட சுற்றுப்பயணமாக கர்நாடகா வந்துள்ளார்.‘ உடுப்பி, தென் கன்னடம், சிக்மகளூர், மங்களூர், ஹாசன் மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவால யங்கள், மசூதிகளுக்குசென்று வழிபாடு நடத்தி அந்த பகுதி மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.

நேற்று காலை டில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட ராகுல்  காலை 11.15 மணிக்கு மங்களூரு வருகை தந்தார். அதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி சென்றார்.

அங்கு  ராஜீவ் காந்தி அரசியல் மையத்தில் சேவாதள் நிர்வாகிகளிடையே கலந்துரை யாடிய அவர், பின்னர் படுபித்ரே நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.  அதைத்தொடர்ந்து நேற்று இரவு மங்களூரில் உள்ள நேரு மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், இரவு கர்னாதேஸ்வரா கோயில், ரோசரியோ தேவாலயம் சென்று வழிபாடு நடத்தினார்.

அதையடுத்து இன்று மங்களூரில் தென்கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்களின் வட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடையே கலந்துரையாடிய ராகுல், மாவட்டத்தின் முன்னணி தலைவர்களைச் சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் சிருங்கேரி மடத்துக்கு வருகை தந்த ராகுல் காந்தி, சாரதாம்பாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு,  சிருங்கேரி மட நிர்வாகியான  ஜகத்குரு சங்காராச்சாரியா பாரதி தீர்த்த சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.

அதைத்தொடர்ந்து  சிருங்கேரி மடத்தில் உள்ள ராஜீவ்காந்தி சம்ஸ்கிருத பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றினார். அதையடுத்து பிற்பகல் டில்லி புறப்பட்டு செல்கிறார்.

செல்லும் இடங்களிலும் எல்லாம் ராகுல்காந்திக்கு பொதுமக்கள் அமோகமான வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகாவில் முதல்கட்ட சுற்றுப்பயணத்தின்போது, கொப்பள், பெல்லாரி, ராய்ச்சூரு, யாதகிரி, கலபுர்கி, பீதர் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். இரண்டாம் கட்டமாக, பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், தார்வாட் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.