ரஜினிகாந்த் கட்சியின் கொடி, மற்றும் பெயர் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்து வந்த நிலையில், கடந்த  வருடம் (2017) டிசம்பர் மாதம் 31-ந்தேதி, தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.

ரஜினி நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்தார்.

மேலும், அரசியல் கட்சிகள் போலவே, மாவட்ட வாரியாக  ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மூன்று  கட்டங்களாக மாவட்ட ரீதியாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நான்காவது  கட்டமாக சென்னையில் கடந்த மூன்று தினங்களாக  நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் அங்கு 15 நாட்களுக்கு மேல் தங்குகிறார். திரும்பிய பிறகு கட்சி பெயர் மற்றும் கொடியை அறிவிக்க இருப்பதாக  மன்ற வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இமயமலை செல்லும் முன்பே கட்சி பெயர் மற்றும் கொடி தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக   தகவல் வெளியாகி இருக்கிறது.

சித்திரை தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந்தேதி அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இதற்காக பிரமாண்ட மாநாடு திருச்சி அல்லது அல்லது சென்னையில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.