09.07.1945 ஈரோடு மகாஜன ஹைஸ்கூலில் சரஸ்வதி ஹாலில் திராவிட மாணவர் கழகத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய சொற்பொழிவு:

“திராவிடம் என்றும், திராவிடர் என்றும் சொல்லுவது நாமாக ஏற்படுத்திய புதிய கற்பனைச் சொற்கள் அல்ல. இது நம் நாட்டிற்கும், நம் மக்களுக்கும் குறிப்பிடும் ஒரு சரித்திர சம்பந்தமான பெயர்களாகும். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வழங்கி வரும் பெயர்களுமாகும். உங்களுக்கு நன்றாய் இந்த உண்மை விளங்கவேண்டுமானால் நீங்கள் உங்கள் பள்ளியில் இன்று படிக்கும் இந்த நாட்டு (இந்துதேச) சரித்திரப் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள்.

அதில் எந்த சரித்திரப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் விஷய முதல் பக்கத்தில் திராவிடம், திராவிடர் என்கின்ற தலைப்புக் கொடுத்து அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டி ருக்கும். இவை முடிந்த அடுத்த பக்கத்தைத் திருப்பினீர்களானால் அதில் ஆரியம், ஆரியர் என்கின்ற தலைப்பு கொடுத்து சரியாகவோ தப்பாகவோ அவற்றின் வரலாறுகள் எழுதப்பட்டிருக்கும்.

எனவே இவை அதாவது திராவிடர், ஆரியர் என்பவை உங்கள் குழந்தைப் பருவத்தில் பள்ளிப்படிப்பில் உங்களுக்கு ஊட்டப்பட்ட சேதிகளும், வெகு காலத்திற்கு முன் ஏற்பட்ட உண்மைகளும் ஆராய்ச்சிச் சுவடிகளில் காணப்படும் சேதிகளுந்தானே ஒழிய இன்று புதிதாக நானோ மற்றும் வேறு யாரோ கொண்டு வந்து புகுத்தியது அல்ல. இதுவேதான் இந்நாட்டுச் சரித்திரத்தின் ஹ,க்ஷ,ஊ ஆகும். இதிலிருந்து பார்த்தாலே நம்முடையவும் நம் நாட்டினுடையவும் தன்மைகள் ஒருவாறு நமக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதற்கு ஆகவே அதை ஞாபகப்படுத்தும் படியான மாதிரியில் அனுபவத்தில் வழக்கத்திற்கு நினைவுக்கு வரும்படி செய்ய இன்று அதைப்பற்றிச் (திராவிடத்தை பற்றி) சிறிது அதிகமாய் உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது. திராவிடர் என்ற நினைவில்லாததால் நமக்கு என்ன கெடுதி ஏற்பட்டது என்று கேட்டால் அந்த நினைவு நமக்கு இல்லாததால்தான் நாம் 4ஆம், 5ஆம் ஜாதியாய், சமுதாயத்திலும், தற்குறிகளாய்க் கல்வியிலும், கூலிகளாய்த் தொழிலும், ஏழைகளாய் வாழ்க்கையிலும் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாய் அரசியல், ஆத்மார்த்த இயல் என்பவற்றிலும் காட்டு மிராண்டி காலத்து மக்களாய் அறிவு, கலாச் சாரம், தன்மானம் ஆகியவைகளிலும் இருந்து வருகிறோம்.

இது இன்று நேற்றல்லாமல் நம்மைத் திராவிடர் என்பதையும் நம்நாடு திராவிடநாடு என்பதையும் மறந்த காலம் முதல் அதாவது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வருகிறோம். நாம் நம்மைத் திராவிடர் என்று கருதினால், நினைவுறுத்திக்கொண்டால் உலக நிலையில் திராவிடர் (நம்) நிலைஎன்ன? தன்மை என்ன? நாம் எப்படி இருக்கிறோம்? என்பது உடனே தென்படும் ஏன் எனில், நாம் எப்படி இருக்க வேண்டியவர்கள்?

நாம் முன் கூறின இழிநிலையும் குறைபாடுகளும் இந்த நாட்டில், ஏன் உலகிலேயே திராவிடர் களுக்குத்தான் (நமக்குத்தான்) இருக்கிறதே தவிர திராவிடரல்லாதவர்களுக்கு இல்லவே இல்லை. திராவிடமல்லாத வேறு நாட்டிலும் இல்லை. சிறைச்சாலைக்குள் இருப்பவன் எந்த வழியில் சிறைக்குள் சென்றானோ அந்தவழியில் வெளிவர முயல வேண்டுமே ஒழிய சிறைக் கதவை, பூட்டை கவனியாமல் அது திறக்கப்படவும், உடைக்கப் படவும் முயலாமல் வெறும் சுவரில் முட்டிக்கொள்வதால் எப்படி வெளிவர முடியும்?

திராவிடன் இழிவு, தாழ்வு என்னும் சிறைக்குள் சிக்குண்டதற்குக் காரணம் அவன் தன்னைத் திராவிடன் என்று உணராமல் ஆரியன் வசப்பட்டு ஆரியத்திற்கு, ஆரிய மதம், கலை, ஆச்சார அனுஷ்டானங்களுக்கு அடிமைப்பட்டதல்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆரியத்தின் பயனாய் ஏற்பட்ட சிறைக் கூடத்தில், கட்டுப்பாட்டின் கொடுமையில் இருந்து வெளிவர விரும்புகிறவன் கையிலும், காலிலும் பூட்டியிருக்கும் ஆரிய பூட்டையும் விலங்கையும் தகர்த்தெறியச் சம்மதிக்க வேண்டாமா? அவைகளைத் தகர்த்தெறி யாமல் எப்படி வெளிவர முடியும்? விலங்கோடு வெளிவந்தால் தான் பயன் என்ன?

ஆகவேதான் ஆரியக்கொடுமை, ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்ட இழிவு நீங்க நாம் ஆரியத்தை உதறித்தள்ள வேண்டும். ஆரியத்தை உதறித்தள்ளுவதற்குத்தான் நம்மை நாம் திராவிடர் என்று சொல்லிக்கொள்ளுவதாகும். அதற்குத் தூண்டுகோல்தான் திராவிடர் என்பது.