திருப்பதி
திருப்பதி கோவிலில் உள்ள ரூ.25 கோடி மதிப்பிலான செல்லாத நோட்டுக்களை மாற்றித் தருமாறு ரிசர்வ் வங்கிக்கு தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2016ஆம் வருடம் நவம்பர் 8 ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாதவை என பிரதமர் மோடி அறிவித்தார். திருப்பதி கோவிலில் அதற்குப் பின்பு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பல லட்சக்கணக்கான பக்தர்கள் உண்டியலில் பணத்தை போட்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலனவை ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களே ஆகும்.
இந்த நோட்டுக்கள் இன்னும் மாற்றப்படாமல் கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் உள்ளன. இந்த நோட்டுக்களின் மொத்த மதிப்பு ரூ.25 கோடி ஆகும். இவற்றை மாற்றி தருமாறு தேவஸ்தான அலுவலகத்தில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் உணர்வுகளை மதித்து அவர்கள் அளித்துள்ள நோட்டுக்களை மாற்றித் தருமாறு அந்தக் கோரிக்கையில் கோரப்பட்டுள்ளது.
தேவஸ்தான அதிகாரி பாலாஜி, ”இந்த கோரிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஏதும் பதில் அளிக்கவில்லை. அதனால் ரிசர்வ் வங்கிக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டுக்கள் கோவில் அலுவலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.