
குண்டூர்
தெலுங்கு நடிகரும் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது கட்சிக் கூட்டத்தில் ஆந்திராவின் அனைத்து அரசியல் தலைவர்களையும் தாக்கிப் பேசி உள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகரும் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் ஜன சேனா என்னும் அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். கடந்த 2014 தேர்தலில் இவர் பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணிக்கு தனது ஆதரவை அளித்தார். இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு இவர் மிகவும் பாடு பட்டது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் கட்சி தொடக்க நாள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையார்றினார்.
அப்போது பவன் கல்யாண், “சிறப்பு அந்தஸ்து என்பது ஆந்திராவின் சுயமரியாதையை பொறுத்ததாகும். அதை மறுப்பதின் மூலம் மத்திய அரசு இந்த மாநிலத்துக்கு அநியாயம் இழைத்து விட்டது. மத்திய அரசுஆந்திர மக்களை வீதியில் இறங்கி போராட வைத்துள்ளது. நாங்கள் எங்கள் போராட்டத்தின் மூலம் இந்த நாட்டின் சாலைகளை முடக்குவோம். அதனால் இந்தியா முழுவதும் எங்களை திரும்பிப் பார்த்து எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அறிந்துக் கொள்ளும்.
மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நாட்டை ஊழலிலும் லஞ்சத்திலும் தள்ளி விட்டார். நாயுடுவின் மகன் லோகேஷ் செய்துள்ள ஊழல்களை அவர் கண்டுக் கொள்வதே இல்லை. லோகேஷ் செய்துள்ள ஊழல்கள் குறித்து நாயுடுவுக்கு தெரியாதா? தெரிந்தும் ஏன் அமைதியாக இருக்கிறார் ? நாயுடுவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? நிச்சயமாக என் டி ராமராவின் ஆன்மா இந்த ஊழல்களை மன்னிக்காது.
ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மத்திய அரசுடன் போராடி சிறப்பு அந்தஸ்து பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. முதல்வரும் எதிர்க்கட்சி தலைவர் ஜகன்மோகன் ரெட்டியும் மத்திய அரசிடம் பயந்து நடுங்குகின்றனர். காரணம் தங்களின் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை என்பதற்காகத் தான். ஊழலற்ற என்னைப் போன்ற சாமானியனுக்கு மத்திய அரசிடம் எந்த ஒரு பயமும் இல்லை” என அனைத்துக் கட்சிகளையும் தாக்கி உரையாற்றி உள்ளார்.