சென்னை:

னது புது மனைவிக்கு கார் ஓட்டக்கற்றுக்கொடுத்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கம் அருகே உள்ள சூளைமேட்டில் அந்த பகுதியை சேர்ந்த டேனி என்பவர் தனது மனைவி பிரித்திக்கு  கார் ஓட்ட பயிற்சி கொடுத்து வந்துள்ளார். அப்போது தவறுதலாக காரை இயக்கிய அவரது மனைவி பிரித்தி அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி பவித்ராமீது மோதினார்.

பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டைவிட்டு வெளியே வந்த அவரது பெற்றோரான துரைவேலன் ஜெயந்தி தம்பதி, பவித்ராவை உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு துக்கி சென்றனர். ஆனால், பவித்ராவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.

இந்த விபத்து அந்த பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கார் பழகிய தம்பதியினர் சமீபத்தில் திருமணமானவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போக்குவரத்து போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பவித்ரா அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில்  இரண்டாவது வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.