சென்னை:
நாளை தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழுவில் பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
இந்நிலையில், நாளை மாலை அதிமுக மற்றும் திமுக கட்சி தலைமைகள் தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளது.
அதிமுக:
சென்னையில் நாளை மாலை 5 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சி தலைமையகமான ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெறும் என்று அதிமுக கொறடா அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையில், உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும், டிடிவி தினகரனின் புதிய கட்சி அறிவிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக
ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் சட்டப்பேரவை கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 15-ம் தேதி மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என்று சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் குறித்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.