நெட்டிசன்:
ஸ்டான்லி ராஜன் அவர்களது முகநூல் பதிவு:
ஐன்ஸ்டீனுக்கு அடுத்து மாபெரும் விஞ்ஞானி என கருதபட்ட ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மரணம் அடைந்ததாக அறிவிக்கபட்டிருக்கின்றது
மிக பெரும் அறிவாளி அவர். விண்வெளி ஆராய்ச்சி அவரின் பிடித்தமான விஷயம். இளம் வயதிலே டாக்டர் பட்டம் வாங்கிய ஹாக்கின்ஸ்க்கு 21 வயதில் மிக கடுமையான நரம்பு நோயினால் பாதிக்கபட்டார்
அதாவது கைகால் அசையாது, பேசமுடியாது கிட்டதட்ட பக்கவாத நிலை. என்ன செய்துவிட முடியும்? கிட்டதட்ட வசூல்ராஜா ஆனந்த் சார் போல சப்ஜெக்டாக அவர் வாழ்ந்திருக்க வேண்டும்
ஆனால் அவரின் அறிவினை பாழாக்க விரும்பா விஞ்ஞான சமூகம் அவருக்கு பிரத்யோக மெஷினை தயார் செய்தது, ஆம் விழி அசைவில் இயங்கும் கணிணி மூலம் உலகோடு பேச தொடங்கினார்
கவனியுங்கள், பேனா இல்லை பேப்பர் இல்லை, புத்தக குறிப்புகளுமில்லை ஆனால் அவர் தன் ஆராய்ச்சி முடிவினை கண்களால் சொன்னபொழுது உலகம் அதிர்ந்தது
குவாண்டம், காஸ்மோலாஜி, தெர்மல் என இவர் பல ஆராய்ச்சி முடிவுகளை சொல்ல சொல்ல பெரும் ஆச்சரியமாக பார்க்கபட்டார்
கருந்துளை ஆராய்ச்சி என்பது கருந்துளை எதையும் வெளியேற்றாது எல்லாவற்றையும் ஈர்க்கும் எனும் கருத்தோடு ஐன்ஸ்டீனே விடைபெற்ற பின், இல்லை கருந்துளையிலிருந்தும் சில கதிர்கள் வருகின்றன என ஆய்வுகளை சொன்னார், அது நிரூபணமும் ஆனது
அந்த கதிர்களுக்கு ஹாக்கின்ஸ் கதிர்கள் என்றே பெயரிட்டது விஞ்ஞான உலகம்
இவரின் இயற்பியல் கணிதத்தை எளிய முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கும் சூத்திரமான “காலம் ஒரு வரலாற்று சுருக்கம்” எனும் திட்டத்தை உலகம் ஏற்றுகொண்டது, அதற்காக அவருக்கு 6 மில்லியன் டாலர் பரிசும் கிடைத்தது
இது தமிழிலும் புத்தகமாக வந்தது
அவர் எழுதிய இரு புத்தகங்கள் A Brief History of Time, The Universe in a Nutshell விஞ்ஞான உலகின் புதிய ஏற்பாடாக கொண்டாபடுகின்றன
பாமரரும் படித்து புரிந்துகொள்ளும் அளவு எளிமையான மொழியும் அவருக்கு வந்தது, படியுங்கள் மிக எளிதாக விண்வெளி புரியும்
இவரின் முதல்மனைவி இவரை பற்றி எழுதிய “theory of everything” என்ற புத்தகம் சக்கை போடு போட்டு திரைபடமாக வந்தது
மாணவர்கள் முதல், ஹாலிவுட் டைரக்டர்கள், விஞ்ஞானிகள் என பலர் அவருக்காக எப்பொழுதும் காத்துகொண்டே இருந்தனர்
விண்வெளி ஆராய்சியினை தாண்டி வேற்றுகிரக மனிதர்கள் ஆய்விலும் இருந்தார். எல்லோரும் ஏலியன்ஸ் அப்படி இருப்பார்கள் இப்படி இருப்பார்கள் என சொன்னபொழுது ஹாக்கின்ஸின் ஆருடம் வேறுமாதிரி இருந்தது
அவர்கள் புழுவாக இருக்கலாம், பாக்டீரியாவாக இருக்கலாம், கண்ணுக்கு தெரிந்த தெரியா வடிவில் நம்மோடு இருக்கலாம், நம்மை போலவே இருக்க என்ன அவசியம் உண்டு என அவர் சொன்னது வேற்றுகிரகவாசி ஆராய்ச்சியில் புதிய கோணத்தை திறந்தது
வேற்றுகிரக வாசிகள் உண்டு என்பதையும் அவர்கள் எதனையோ தேடி அலைகின்றார்கள் என்பதையும், பின்னொரு நாளில் பூமி அவர்களால் ஆட்கொள்ளபடும் என்பதையும் சொல்லியிருக்கின்றார்
இவரின் ஆராய்சி முடிவுகள் எல்லாம் சிலிர்ப்பூட்டுபவை, பெரும் ஆச்சரியமானவை
கண்களை தவிர ஏதும் அசைக்கமுடியா மனிதனா இவ்வளவு விஷயங்களை கொடுத்தான் என நம்பவே முடியாத அதிசயம் அவர்
எல்லோரும் போல அவர் நலமாக இருந்தால் எவ்வளவு கொடுத்திருப்பார் என பலர் யோசிக்க, இதுகாலம் காத்து இவ்வளவாவது பெற்றோமே என கண்களை துடைகின்றது விஞ்ஞான உலகம்
விஞஞானிகள் ஒவ்வொரு முடிச்சையும் விட்டு செல்வார்கள், அதனை இன்னொரு விஞ்ஞானி வந்து அவிழ்ப்பார், இந்த சங்கிலி தொடரால்தான் இவ்வுலகம் இவ்வளவு மாற்றங்களை பெற்றது
அப்படி கலிலியோ, கோபர் நிக்கஸ், நியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் வந்தவர் ஹாக்கின்ஸ். விண்வெளி இயற்பியல், குவாண்டம், காஸ்மோலாஜி என பல துறைகளை எங்கோ இழுத்து நிறுத்திவிட்டு மறைந்திருக்கின்றார்
இனி வரும் விஞ்ஞானிகள் அதிலிருந்து இன்னும் உயர்த்துவார்கள்
உடலால் சுத்தமாக முடியாதபோதும், வானத்தை ஏறெடுத்து கூட பார்க்கமுடியா நிலையிலும் விண்வெளி ஆய்வுகளை மகத்தான முறையில் வெற்றியாக்கிய அந்த ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எனும் அசாத்திய மனிதர் இன்று இறந்துவிட்டார்.
ஹிக்கின்ஸின் கோட்பாடு இன்றி இனி அமையாது பல ஆராய்ச்சிகள்.
அந்த மாபெரும் விஞ்ஞானிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், 21 வயதிலே முடிந்திருக்கவேண்டிய அவரின் ஆராய்சியினை 78 வயதுவரை நீட்டித்த அந்த மேற்குலக விஞ்ஞானிகளுக்கும் நன்றிகள்