அமராவதி

ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தென் இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மத்திய அரசு வட இந்தியாவை வளமாக்குவதாக குற்றம் சாட்டி உள்ளார்.

ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் அம்மாநில ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் தனது மத்திய அரசு அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்தது.   மேலும் பாஜகவுடனான கூட்டணியில் தொடருவது குறித்தும் ஆலோசித்து வருவதாக தெரிவித்தது.   இந்நிலையில் ஆந்திர பிரதேச சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் சந்திரபாபு நயுடு உரையாற்றினார்.

நாயுடு தனது உரையில், ”ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்பது என்பது உணர்ச்சி  பூர்வமானது அல்ல, எங்கள் உரிமை பூர்வமானது.   அதற்கு பதிலாக மத்திய அரசு பண உதவி அளித்ததாக கூறுகிறது.   மத்திய அரசின் பணம் என எதுவும் தனியாக கிடையாது.   அனைத்தும் மக்களின் பணம் தான்.   தென் இந்திய மாநிலங்கள் அதிக அளவில் ஈட்டித் தரும் வரி வருவாயைக் கொண்டு மத்திய அரசு வட இந்திய மாநிலங்களை வளமாக்கி வருகிறது.

ஆந்திராவிடம் மத்திய அரசு ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.  ஆந்திரா இந்நாட்டில் ஒரு அங்கம் இல்லையா?  தொழிற்சாலை வரிக்கான சலுகைகளும் ஜி எஸ் டி சலுகைகலும் வடகிழக்கு மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்க்ளுக்கு அளிக்கும் போது ஆந்திராவுக்கு ஏன் தரக்கூடாது?   தேசிய காவல்துறை அகாடமி போன்றவற்றை ஆந்திராவில் நிறுவ மத்திய அரசு ஏன் தயங்குகிறது.

மத்திய அரசு நிதியை இந்த அரசு சரியாக செலவிடாததாக பாஜக உறுப்பினர்கள்  தெரிவித்துள்ளனர்.   நாங்கள் நிதியை எவ்வாறு உபயோகித்துள்ளோம் என்னும் விவரம் உட்பட அனைத்தும் மத்திய அரசுக்கு அளித்துள்ளோம்.   மத்திய அரசு தனது வாக்குறுதிகளை காப்பாற்ற தவறி உள்ளது.   அது குறித்து பாஜக உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு வினாக்களை எழுப்ப வேண்டும்”  என கூறினார்.