சென்னை:

டிடிவி தினகரன் ஆரம்பிக்க உள்ள புதிய கட்சி தொடக்க விழாவில் அதிமுக எம்எல்எக்கள் பலர் பங்கு பெறுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எடப்பாடி, பன்னீர் தலைமையிலான அதிமுகவில் பரபரப்பு நிலவி வருகிறது.

அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக நினறு குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதைத்தொடர்ந்து டில்லி ஐகோர்ட்டும் அவருக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வரும் 15ந்தேதி டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுகுறித்த இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பே, இடைக்கால ஏற்பாடாக புதிய கட்சி தொடங்க உள்ளோம்.

இந்த கட்சி தொடக்க விழா வரும் 15ந்தேதி காலை 9 மணிக்கு மதுரை மேலூரில் நடைபெறும் என்றும், அப்போது டிடிவி தினகரன் கட்சி பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்துவார் என்று கூறினார்.

மேலும், ஏற்கனவே தங்களுக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், மேலும்   அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதா அவர்கள்மீது   கட்சி தாவல் தடை சட்டத்தில்  நடவடிக்கை எடுக்க முடியாது என்ற அவர், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பே வரும் என்றும் கூறினார்.

டிடிவி தினகரன் தனது ஆதரவு ஸ்லிப்பர் செல்கள் எடப்பாடி அணியில் உள்ளார்கள் என்று ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், 3 எம்எல்ஏக்கள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]