“இயற்கையை சீரழிப்பது ஒருபுறம் அதிகரித்திருப்பது போலவே, இயற்கை குறித்த விழிப்புணர்வும் இன்னொரு பக்கம் பெருகி வருகிறது.
இப்படி இயற்கை மீது காதல்கொண்டவர்கள்தான் ட்ரக்கிங் என்கிற மலையேற்ற பயிற்சியை விரும்பிச் செய்கிறார்கள். ஆகவே அவர்களை குறை சொல்ல முடியாது.
ஆனால், மலையேற்றத்துக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளை கடைபிடிக்காமல் சென்றதுதான் வருத்தமான விசயம்” என்கிறார்கள் வன ஆர்வலர்கள்.
மேலும் இவர்கள் தெரிவிப்பதாவது:
“மலையேற்றம் செல்ல, உரிய பயிற்சி எடுத்த பிறகே செல்ல வேண்டும். தற்போது தீ விபத்தில் சிக்கிய குழுவினர் எந்த அளவுக்கு பயிற்சி எடுத்தார்கள் என்பது தெரியவில்லை.
40 பேர் வரை மலையேற்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் பெண்களும் அதிகமாக இருந்திருக்கிறார்கள். இது போன்ற நிலையில், வனத்துறை காவலர் தொலைத்தொடர்பு கருவிகளுடன் உடன் சென்றிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செல்லவில்லை.
தவிர இது போன்ற தருணங்களில், அந்தப்பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களை அழைத்துச் செல்வதும் அவசியம். அவர்களுக்குத்தான் காட்டுப்பாதை நன்கு தெரியும். திடீரென பிரச்சினை ஏற்பட்டால் சரியான வழியில் மற்றவர்களை அழைத்து வருவார்கள். தற்போது மலையேற்றம் சென்றவர்களுடன் இப்படி மலைவாசிகளை அழைத்துச் செல்லவும் இல்லை.
காட்டுத்தீயில் சிக்கியவர்கள் சரியான பாதை தெரியாமல் வெப்பம் தாங்காமல் குதித்து உயிரைவிட்டதாக தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரக்கிங்குக்கு அழைத்துச் சென்ற ஒருங்கிணைப்பாளர் நிஷா தமிழொலியும் சிக்கி காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
தவிர, மேற்கண்ட வனப்பகுதிகளில் மார்ச் முதல் ஜூன் மாத காலம் வரை காட்டுத்தீ பரவும் வாய்ப்பு அதிகம் உண்டு. ஆகவே இந்த காலகட்டத்தில் மலையேற்ற பயிற்சிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை. ஆனால் இவர்கள் சென்றிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும்விட முக்கியம் ட்ரெக்கிங் செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்டவர்கள் தான் அனுமதிக்கப்பட வேண்டும். விதிவிலக்காக, உடல் தகுதி இருந்தால் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்கலாம். மேலும் அனைவருக்குமே ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் சோதனை செய்தே அனுமதிக்க வேண்டும்.
தவிர முறையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
அதாவது, முதலுதவி செய்வது எப்படி, இக்கட்டான தருணத்தில் – வன விலங்குகள் வந்துவிட்டாலோ, திடீர் தீ ஏற்பட்டாலோ – எப்படி எதிர்கொள்வது, குழுவுடன் இணைந்து செயல்படுவது எப்படி… என்பன உள்ளிட்ட பயிற்சிகள் தேவை.
ஆனால் தற்போது ட்ரக்கிங் சென்று விபத்தில் சிக்கிய குழுக்கள் இவற்றில் எதையும் பின்பற்றியதாக தெரியவில்லை. வனக்காவலர்களும் எப்படி அனுமதித்தார்கள் என்பதும் தெரியவில்லை” என்கிறார்கள் வன ஆர்வலர்கள்.
தவறு நடந்துவிட்டது, விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்திருக்கிறோம். இனியாவது விதிகளை சரியானபடி கடைபிடிக்கவேண்டும்.