டில்லி:
இந்தியாவிற்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானு வேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று அதிகாலை இந்தியா வந்த பிரான்ஸ் அதிபரை பிரதமர் மோடி கட்டித்தழுவி வரவேற்றார். அதைத்தொடர்ந்து, அவருக்கு ஜனாதிபதி மாளிகையில், சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற வீரர்கள் அணி வகுப்பு மரியாதையை இம்மானுவேல் மெக்ரான் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, இந்தியா வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரான்ஸ் அதிபரை, இந்திய வெளியுறவுத்த துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசுகிறார்.
இதையடுத்து, உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. அதன் பின்னர், இரு நாடு களின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி- இம்மானுவேல் மெக்ரான் ஆகிய இரு தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்துகின்றனர். அதைத்தொடர்ந்து இருநாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளனர்.
உலக தலைவர்களில் ஒருவராக கருதப்படும் இமானுவேல் மேக்ரன். கடந்த ஆண்டு மே மாதம் பிரான்ஸ் அதிபராக பதவியேற்று கொண்டார். அதையடுத்து முதல் முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.