சென்னை:

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பபடுவது போல தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா  தனது முகநூல் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக தலைவர் தமிழிசையோ, ராஜாவின் கருத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை.. அது அவரது சொந்த கருத்து என கூறியிருந்தார்.

மேலும் சமூக வலைதளங்களிலும் எச்.ராஜாவின் கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து,  தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற தனது கருத்தை பேஸ்புக்கிலிருந்து நீக்கினார். அதைத்தொடர்ந்த  அந்த பதிவுக்கு வருத்தம் தெரிவித்து இன்று மீண்டும் புதிய பதிவு  தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில்  எச். ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திமுக உள்பட அனைத்து கட்சியினரும் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலையில் திமுக உள்பட  அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தினர்.  அண்ணா சாலையில் சிம்சன் பெரியார் சிலைக்கு முன்பே திமுக, திக, தமிழக வாழ்வுரிமை கட்சியினர், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் சுப வீரபாண்டியன், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது எச்.ராஜாவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.  மேலும் எச் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோரி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் கலையாததால் போலீஸார் கைது செய்தனர். இதன் காரணமாக  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபோல மதுரையிலும் போராட்டம் நடைபெற்றது.  எச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி அவரது உருவ பொம்மையை கட்சியினர் எரித்தனர்.  மதுரையில் உள்ள  பாஜக அலுவலகத்தை முற்றுகையிட திராவிடர் விடுதலை கழகத்தினரும் மாணவர் அமைப்பினரும் முயற்சி செய்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து செல்லாததால் போலீஸார் கைது செய்தனர்.

அதுபோல தமிழகம் முழுவதும் திமுகவினர் உள்பட அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.