டில்லி:

எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு படி, டில்லி உயர்நீதி மன்றம்  சிறப்பு நீதிமன்றங்களை அமைத்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் எம்.பி., எம்எல்ஏக்க ளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்க உச்சநீதி மன்றம் கூறியது. இதற்கான ஒப்புதலை கடந்த ஆண்டு டிசம்பர் 14ந்தேதி உச்சநீதி மன்றம் அளித்தது.

ஏற்கனவே கடந்த ஆண்டு உச்சநீதி மன்றத்தில், குற்றவழக்குகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படும் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி  பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது,  எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு எதிரான குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து, இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் வகையில்,  7.8 கோடி ரூபாய் செலவில், 12 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதன்படி, எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க 2 சிறப்பு நீதிமன்றங்களும்,  எம்எல்ஏக்களின் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க  தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், கர்நாடகம், பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது.

இதைத்தொடர்ந்து, 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. அதைத்தொடர்ந்து சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், டில்லியில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க  சிறப்பு நீதி மன்றங்களை டில்லி உயர்நிதி மன்றம் அமைத்துள்ளது.

இந்த நீதிமன்றத்தில் விரைவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.