மகாகவி பாரதி மண்ணில் நிற்பதற்கு பெருமைப்படுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தேர்தல் அறிக்கையின் போது, அவர் அறிவித்த பெண்களுக்கு மானியவிலையில் ஸ்கூட்டர் அளிக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னையில் துவக்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடந்த இந்த விழாவில் அவர் 5 மகளிருக்கு ஸ்கூட்டருக்கான சாவியை அளித்தார்.
இதையடுத்து, உரையாற்றிய அவர், “ தமிழக மக்களுக்கு தலைவணங்குகிறேன், அன்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம்” என்று தமிழில் தனது உரையை ஆரம்பித்தார். தொடர்ந்து, “மகாகவி பாரதி பிறந்த மண்ணில் நிற்பதை பெருமையாக நினைக்கிறேன்” என்றும் தமிழில் பேசினார்.
மேலும், மேடையில் அமர்ந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர், ஆளுநர், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பிற அமைச்சர்களுக்கு தனது வணக்கத்தை தெரிவித்தார். பிறக வழக்கம் போல் தனது உரையை ஆங்கிலம் கலந்த ஹிந்தியில் தொடர்ந்தார்
அப்போது, “ சுகாதாரம், விவசாயிகள் நலன் ஆகியவற்றை இலக்காக வைத்து மத்திய அரசு செயல்படுகிறது. சாதாரண மக்களுக்கு அதிகாரமளித்தலை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாநில அரசுடன் இணைத்து வளமிக்கதாக மாற்றுகிறோம். மகளிருக்கான இலவச ஸ்கூட்டர் திட்டம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பயனளிக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் விவசாயிகள் பயனடைந்து இருக்கிறார்கள்” என்று பேசிய மோடி, இறுதியில் “நன்றி, வணக்கம்” என்று கூறி தனது உரையை முடித்தார்.