திருவனந்தபுரம்:
பள்ளி மாணவர் சேர்க்கையின் போது தடுப்பூசி அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரளா அமைச்சரவை புதிய மருத்துவ கொள்கை மசோதாவுக்கு ஒப்புதல் அளிததுள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் லைசஜா தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பள்ளியில் மாணவ மாணவிகளை சேர்க்க தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படுகிறது. பல இடங்களில் தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்தே இந்த புதிய உத்தரவு அமலுக்கு வருகிறது. தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்ட மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குவது, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மாலை 6 மணி வரை செயல்படுவது, திருநங்கைகளுக்கு பிரத்யேக மருத்துவமனை, விபத்து முதலுதவி பயிற்சி போன்ற அம்சங்களும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
இதற்கான பரிந்துரைகளை கேரளா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இக்பால் தலைமையிலான 17 பேர் கொண்ட குழுவினர் தயாரித்து வழங்கினர். கேரளாவில் மருத்துவம் வணிக மயமாவதை தடுப்பதில் அரசு ஆர்வமாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.