டில்லி:

மத்திய அரசு சார்பில் இந்திய தொழிலாளர் மாநாடு வரும் 26, 27ம் தேதிகளில் டில்லியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. 3 ஆண்டுகள் கழித்து இந்த 47வது மாநாடு ‘இந்திய தொழிலாளர் நாடாளுமன்றம்’ என்ற தலைப்பில் நடக்க இருந்தது.

2018&19ம் ஆண்டு பட்ஜெட்டில் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டவில்லை. அதனால் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக ஆர்எஸ்எஸ் தொழிற்சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கம் அறிவித்தது. குஜராத்தில் நடந்த இச்சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மாநாடு அரங்கிற்கு வெளியே பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. அதேபோல் போல் இதர சங்கங்களும் சில காரணங்களை தெரிவித்து புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட தொடங்கியது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஐஎன்டியூசி.க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் தொழிலாளர் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் நலத் துறையில் இருந்து அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், தொழிற்சங்கத்தினரின் புறக்கணிப்பு அறிவிப்பால் இரு தரப்புக்கும் இடையிலான தர்ம சங்கடத்தை தவிர்க்கவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.