வாஷிங்டன்:

மெரிக்காவில் இருந்து விலை குறைவான கோழி இறைச்சி மற்றும் பாகங்கள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

கோழி இறைச்சி மற்றும் பாகங்கள் இறக்குமதி செய்வது குறித்து, இந்திய அரசு அமெரிக்க கோழி வளர்ப்புத் துறையுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.    இந்தியாவைவிட விட அமெரிக்காவில் கோழிகள் மலிவான விலையில்  கிடைப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2015 ஆம் வருடம் பறவைக்காய்ச்சல் உலகெங்கும் பரவியதில் இருந்து பறவைகள் இறக்குமதியில் இந்தியா மிகவும் கடுமையான விதிமுறைகள் மேற்கொண்டுள்ளது.   ஆனால் அந்த கடுமையான விதிமுறைகளுக்கு ஒப்புக் கொள்ளாத அமெரிக்க கோழி வளர்ப்புத் துறை அந்த விதிகளை மாற்றி அமைக்க சொல்லியது.   அமெரிக்காவின் வேண்டுகோளின்படி இந்த விதிமுறைகள் இரு முறை மாற்றப்பட்டும் அமெரிக்கா முழு திருப்தி அடையவில்லை என கூறப்படுகிறது.    அதன் பிறகு இரு நாடுகளும் கலந்து பேசி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை மற்றும் விலங்குகள் நலத்துறையிடம் இருந்து ஒப்புதல் கேட்கப்பட்டது.   தற்போது அந்த ஒப்புதல் கிடைத்துள்ளது.   அதனால் விரைவில் இந்தியாவில் அமெரிக்க இறக்குமதி கோழி இறைச்சி மற்றும் கோழியின் பாகங்கள் விற்பனைக்கு கிடைக்கும் என சொல்லப்படுகின்றது.

இதனால் உள்நாட்டு கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.    அமெரிக்க நாட்டு கோழி இறைச்சி விற்பனையால் தங்களின் விற்பனையில் சுமார் 40% பாதிக்கப்படும் என கூறுகின்றனர்.  ஆனால் அரசு இந்த இறக்குமதியினால் உள்நாட்டு கோழி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.