புட்டூர்,  கர்நாடகா

மைசூர் மற்றும் பெங்களூரு மக்களுக்கு கன்னடம் பேசத் தெரியாது என மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பாஜக வின் மத்திய அரசில் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர் கர்னாடகத்தை சேர்ந்த ஆனந்தகுமார் ஹெக்டே.   இவர் கூறும் கருத்துக்கள் சர்ச்சையை கிளப்புவது வாடிக்கையாகி வருகிறது.   இதற்கு முன்பே பல முறை இவர் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   தற்போது இவர் கர்னாடகா மக்கள் பற்றி பேசிய பேச்சு புது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கர்னாடகா மாநிலம் தக்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள புட்டூரில் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே, “கர்னாடகாவில் தக்சின கன்னடா, உத்தர கன்னடா மற்றும் ஷிமோகா பகுதி மக்கள் மட்டுமே கன்னடத்தை சரியாக பேசுகிறார்கள்.   மீதம் உள்ளவர்கள் பேசுவது கன்னடமே கிடையாது.   குறிப்பாக பெங்களூரு மற்றும் மைசூர் பகுதியில் உள்ளவர்களுக்கு கன்னடம் பேசவே தெரியாது.”  என உரையாற்றினார்.

ஆனந்தகுமாரின் பேச்சை எதிர்க்கட்சியினர் முட்டாள்தனமான பேச்சு என விமர்சித்துள்ளனர்.    அத்துடன் கன்ண்ட இயக்கங்கள் அமைச்சருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப் போவதாக அறிவிப்பு விடுத்துள்ளன.    அது மட்டுமின்றி பாஜக வை சேர்ந்தவர்களே இவரது இந்தப் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

”தற்போது கர்னாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.   இந்நிலையில் மத்திய அமைச்சரின் இது போன்ற பேச்சுக்களால் கட்சிக்கு மிகவும் கெட்ட பெயர் உண்டாகும்.    இது போல அடிக்கடி பேசி வரும் ஆனந்த்குமார் ஹெக்டே மீது மாநிலக் கட்சித் தலைமையும், தேசியத் தலைமையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என கர்னாடகா பாஜக பிரமுகர் ஒருவர் கூறி உள்ளார்.