கான்பூர்
கான்பூரில் உள்ள ரோட்டோமாக் பேனா நிறுவனம் பல வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பித் தரவில்லை என புகார் வந்துள்ளது.
கான்பூரை சேர்ந்த விக்ரம் கோத்தாரி ரோட்டோமாக் பேனா நிறுவனத்தை நடத்தி வருகிறார். பேனாக்கள் தயாரிக்கும் இந்த நிறுவனம், மிகவும் புகழ்பெற்றதாகும். இந்த நிறுவன அதிபர் கோத்தாரி ஐந்து அரசு வங்கிகளைடம் இருந்து ரூ. 800 கோடி அளவில் கடன் வாங்கி உள்ளார். அலகாபாத் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய ஐந்து வங்கிகளில் கடன் வாங்கி உள்ளார்.
வங்கிகள் கோத்தாரிக்கு கடன் வழங்குவதற்காக பல விதிகளை மீறி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர் இது வரை இந்தக் கடனுக்கான வட்டி, மற்றும் அசல் எதையும் திருப்பித் தரவில்லை என வங்கிகள் அறிவித்துள்ளன. கான்பூரில் உள்ள கோத்தாரியின் அலுவலகம் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்டுள்ளது. கோத்தாரி எங்கிருக்கிறார் என்னும் விவரமும் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
அலகாபாத் வங்கியின் மேலாளர் ராஜேஷ் குப்தா, “கோத்தாரி தனது கடனுக்கு ஈடாக தனது சொத்துக்களை அளித்துள்ளார். அதனால் அந்த சொத்துக்களை விற்பதன் மூலம் கடன் தொகையை மீட்க முடியும்” என தெரிவித்துள்ளார். இது குறித்து மற்ற வங்கியில் இருந்து எந்த ஒரு தகவலும் தரப்படவில்லை.
ஏற்கனவே விஜய் மல்லையா, நிரவ் மோடி வரிசையில் இவரும் ஏதும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருக்கலாமோ என அஞ்சுவதாக சில வங்கி ஊழியர்கள் கூறி உள்ளனர்.