டில்லி:

சிபிஎஸ்இ மாணவர்களின் மதிப்பெண்கள் இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது என்றால், இதில் முன்னாள் மாணவர்களின் தனிப்பட்ட ரகசிய உரிமை கோர முடியாது என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் 10, 12ம் வகுப்பு பதிவேடு விபரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முகமது நவுசாத்தீன் என்பவர் கோரியிருந்தார். இதற்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது.

பதிவேடுகளை பார்வையிட மத்திய தகவல் ஆணையம் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடை க்கால தடை விதித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கூறுகையில்,‘‘மாணவர்களின் சிபிஎஸ்இ மதிப்பெண்கள் அனைத்தும் தற்போது இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இது தற்போது சாத்தியம் என்றால் முன்னாள் மாணவர்கள் தனி நபர் ரகசிய உரிமை கோர முடியாது’’ என்றார்.

மேலும். தற்போதைய சூழ்நிலை மற்றும் அடுத்த கட்ட விசாரணையில் விவாதிக்கப்பட வேண்டிய குறித்த பட்டியலை தயாரித்து தாக்கல் செய்யுமாறு சிபிஎஸ்இ வக்கீல் அனில் சோனிக்கு நீதிபதி உத்தரவிட்டு வழ க்கு விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.