நடந்தாய் வாழி காவேரி!  நாடெங்குமே செழிக்க! 

நன்மையெல்லாம் சிறக்க!

“உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை

சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி”

“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக்

கருங்கயற்கண் விழத்தெல்கி நடந்தாய் வாழி காவேரி”

காவிரியின்  செல்வ செழிப்பு குறித்து சிலப்பதிகாரம் அழகாக எடுத்துக் காட்டுகிறது.

இவ்வளவு சிறப்பு மிக்கதும், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை டெல்டா பகுதிகளின் விவசாயி களின் வாழ்வாதாரமான காவிரி தாயை கர்நாடகா அணைகள் கட்டி, தமிழகத்திற்குள் வராமல் தடுத்து வருகிறது….

காவிரிக்கு பல சிறப்புகள் உண்டு. வான் பொய்த்தாலும், தான் பொய்யா காவிரி என்று பாடப்பெற்ற காவிரி தற்போது வானம் பாத்த பூமியாகத்தான் வறண்டு போனது…

கர்நாடகாவின் களவாடித்தனத்தாலும், மத்தியில் ஆளும் அதிகாரங்களின் அரசியல் சூழ்ச்சியினாலும் காவிரியை தமிழத்திற்கு வரவிடாமல் தடுத்து வருகிறார்கள்…

காவிரி சர்ச்சை குறித்த  200 ஆண்டுகால வரலாறு குறித்து திரும்பி பார்போம்….

மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள குடகு பகுதியில் உருவாகிறது காவிரி ஆறு.

காவிரி உருவாகும் இடத்தைத்தான் தலைக்காவிரி என்றும் அழைக்கிறோம்.

கர்நாடகாவில் உருவாகி தமிழகத்தை நோக்கியே பாய்ந்து வருகிறாள் காவிரி, …

கர்நாடகாவில் சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் மட்டும் பயணம் செய்யும் காவிரி, தமிழகத்தில்தான் 400க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் பயணம் செய்து வங்கடலில் சென்று தன்னை அமைதிப்படுத்து கிறாள்…

தமிழகத்தின் டெல்டா மாவடங்களில் பாய்ந்தோடும் காவிரி, அந்த பகுதி மக்களின் விவசாயம் மட்டுமின்றி குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறாள்…

காவிரியின் காரணமாக தமிழக விவசாயிகளும் 3 போகம் அளவுக்கு பயிர்கள் விளைவித்து நாட்டு மக்களின் பசிப்பிணியை போக்கி வந்தார்கள்.

காவிரியின் வேகத்தை கட்டுப்படுத்தவே சேலம் அருகே மேட்டூரில் அணை கட்டப்பட்டது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டது கர்நாடகா.

இதன் காரணமாக 1807-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கும், மைசூர் மாகாணத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.

மைசூர் மாகாண கர்னல் சாங்கி, கர்நாடகாவுக்கு ஆதரவாக 1866ம் ஆண்டு கர்நாடகத்தில் அணை கட்ட திட்டம் தீட்டினார்.

இதற்கு சென்னை மகாண அரசு எதிர்ப்பு தெரிவித்து.

இது தொடர்பாக இரு மாகாண நிர்வாகங்களும் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

இதையடுத்து 18-2-1892ல் இரு மாகாணங்களுக்கும் இடையே  ஒரு ஒப்பந்தம் தயரானது.

 இதுதான் காவிரி நதிநீர் பங்கீட்டில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஒப்பந்தம்.

ஒப்பந்தத்தில்,  மைசூர் மாகாணம் காவிரியின் குறுக்கே அணை கட்டத் திட்டமிட்டால், அதற்கு சென்னை மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.

கர்நாடகத்தில்பாசனப் பரப்பை பெருக்குவதற்கும் சென்னை மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டும் எனப் பேச்சு வார்த்தையில் ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன்படி 1910-ம் ஆண்டு மைசூர் மாகாணம் காவிரியின் குறுக்கே கண்ணம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி கொள்ளளவில் ஒரு அணை (கிருஷ்ணராஜசாகர் அணை) கட்டத் திட்டமிடுகிறது.

அதே நேரத்தில் சென்னை மாகாண அரசும் சேலம் மாவட்டம் மேட்டூரில் ஒரு அணை கட்டத் திட்டமிடுகிறது.

அதைத்தொடர்ந்து 1924ம் ஆண்டு இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தததில், இரு மாநிலங்களும் அணை கட்டிக் கொள்ளவும், பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்ள அனுமதி

இந்த ஒப்பந்தத்தம் 50 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் அதன்பிறகு மீண்டும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்தே  சென்னை மாகாணம் 1924ம் ஆண்டு மேட்டூரில் அணை கட்ட தொடங்கியது.  சுமார் 10 ஆண்டுகள் நடைபெற்ற இந்த கட்டுமாணப்பணி 1934ல் முடிவடைந்து,  ஜூன் 12ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

 தற்போது வரை மேட்டூர் அணை தான் தமிழகத்தின் பெரிய அணையாக உள்ளது.

இந்த நிலையில்1947ம் ஆண்டு ஆகஸ்டு 15 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

அதன் காரணமாக இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் உதயமானது. மாநில பரப்புகளும் மாற்றி அமைக்கப்பட்டன

காவிரி கர்நாடகாவில் உதயமாவதால் அது தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி மீண்டும் பிரச்சினையை கிளறியது.

வெள்ளைக்காரர்கள் ஒப்பந்தம் அவர்களோடு முடிந்து என கர்நாடகா சண்டித்தனத்தை மீண்டும் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து  தமிழகத்திற்கு வந்துகொண்டிருந்த தண்ணீரை தடுக்க தொடங்கி, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்க தொடங்கியது.

இதன் காரணமாக தமிழக விவசாயிகளின் விவசாயம் பாதிக்கத்தொடங்கியது. குடிநீருக்கும் பிரச்சினை ஆரம்பமானது

இதுகுறித்து பல முறை இருமாநில அரசுகளும் பேசி பார்த்தும், கர்நாடகா அசைந்துகொடுக்கவில்லை.

கர்நாடகா வெறியர்களை தூண்டிவிட்டு பிரச்சினையை கிளப்பி அதன்மூலம் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது.

மத்தியில் ஆளும் அரசுகளும் இந்த பிரச்சினையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனேயே செயல்பட்டது.

அதைத்தொடர்ந்து தமிழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் அப்போது திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. கருணாநிதி முதல்வராக இருந்தார்.

மத்தியிலும், கர்நாடகத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த நிலையில் காங்கிரசுடன் திமுகவுக்கு இருந்த நெருக்கம் காரணமாக, பிரதமர் இந்திரா காந்தியின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, கர்நாடகாவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு கருணாநிதி வாபஸ் பெற்றார்.

இது, காங்கிரசின் சதி என்றும், தமிழகத்தின் வரலாற்று பிழையாகவும் கூறப்பட்டது.

ஆனால், இந்திராவும் இந்த பிரச்சினையில் நிரந்தர முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

மீண்டும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன.

1976ம் ஆண்டு, காவிரி உண்மை அறியும் குழுவின் தரவுகளைக் கொண்டு, இரு மாநிலங்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.

ஆனால், அதற்குள், தமிழக அரசு கலைக்கப்பட்டு, தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, கருணாநிதி ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்தது பழைய 1892 – 1924 வரும ஒப்பந்தமே செயல்படுத்தவேண்டும் என அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் வலியுறுத்தினார்.

இந்தநிலையில்தான் காவிரி வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிப்ரவரி 1990-ம் ஆண்டு, இரண்டு மாநிலங்களும் பேசி, இந்தப் பிரச்னைக்கு ஏப்ரல் 24ம் தேதிக்குள் ஒரு தீர்வு காணவேண்டும் என்று உத்தரவிட்டது.

பேச்சு வார்த்தையில் எந்தச் சுமூகமான தீர்வும் எட்டப்படாததால், நீதிமன்றம், மத்திய அரசை ஒரு தீர்ப்பாயம் ஏற்படுத்தும்படி உத்தரவிட்டது.

 அதைத்தொடர்ந்து அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது.

 2-6- 1990ம் ஆண்டு  காவிரி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது

(தீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு (டிஎம்சி): கர்நாடகம்: 465, தமிழகம்: 566, கேரளம்: 99.8, புதுவை: 9.3.)

1980 முதல் 1990 வரை தமிழகமும், கர்நாடகமும் பங்கிட்டுக் கொண்ட நதி நீர் அளவை ஆராய்ந்து,

 தீர்ப்பாயம்  1991ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி ஒரு இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.

அதன்படி, தமிழகத்திற்கு 205 டி.எம்.சி நீரை ஆண்டுதோறும் கர்நாடகம் வழங்க வேண்டும். அதே நேரம் கர்நாடகா, தன் சாகுபடிப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக்கூடாது.

ஆனால் கர்நாடகா இதை ஏற்க மறுத்து கலவரத்தை உருவாக்கியது. இந்த கலவரத்தில் 12 தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடாகாவிலிருந்து அடித்து விரட்டப்பட்டனர்.

தமிழர்கள் வாழும் பகுதியில்ஒரு மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவதாக  கர்நாடக அரசு அறிவித்தது

காவிரி தீர்ப்பாயம் உத்தரவை எதிர்த்து, . கர்நாடக அரசு ஒரு அவசர சட்டத்தை கொண்டு வருகிறது.

அந்த அவசர சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

11-12- 1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு தமிழகஅரசின் வற்புறுத்தல் காரணமாக அரசிதழில் வெளியிடப்படுகிறது.

ஆனாலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரைத் தர மறுக்கிறது.

1993ம் ஆண்டு ஜூலை மாதம், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரியில் கர்நாடகம் தண்ணீர் விடுவிக்கக் கோரி சென்னை கடற்கரையில்  உண்ணாவிரதம் தொடங்கினார்.

இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மத்திய அரசு தலையிட்டு  பிரச்சினையை  தற்காலிகமாக அமைதிபடுத்தியது.

இந்த பிரச்சினையில் அப்போது, பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக பதவி வகித்த வாழப்பாடியார், மத்திய அரசு கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி,   மத்திய அரசின் போக்கைக் கண்டித்து தனது பதவியை தூக்கி எறிந்தார்.

மீண்டும் 1995ம் ஆண்டு, போதிய மழையின்மையால் காவிரிப் பிரச்னைவெடித்தது

தமிழ்நாடு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றது.. உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் திறந்துவிட வேண்டுமென்று கோரியது. உச்ச நீதிமன்றமும் 11 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

வழக்கம் போல இதையும் கர்நாடகா நிராகரிக்கிறது.

தமிழகஅரசு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று, தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.

காவிரி பிரச்சினை பிரதமர் தலையிட்டு, ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்  உச்சநீதி மன்றம்  உத்தரவு.

அதைத்தொடர்ந்து பிரதமர் நரசிம்மராவ் இரு மாநில முதல்வர்களையும் அதுத்து கூட்டத்தைக் கூட்டுகிறார்.

அந்த கூட்டத்தில் கர்நாடகா அரசு 6 டி.எம்.சி தண்ணீர் தர சம்மதம் தெரிவித்துவிட்டு பின்னர் தண்ணீர் தற மறுத்தது.

அதைத்தொடர்ந்து 1998ம் ஆண்டு, பிரதமரின் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது.

இதில் புதுச்சேரி, தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகத்தின் முதல்வர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப் பட்டார்கள்.

இந்த ஆணையத்துக்கு ஆலோசனை வழங்க, காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

மீண்டும் 2002ம் ஆண்டு மீண்டும் நதி நீர் பங்கீட்டில் பிரச்னை வெடிக்கிறது.

அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி ஆணையம், தமிழகத்துக்கு 9000 கன அடி நீர் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதை ஏற்க மறுத்த கர்நாடாக  மீண்டும்  கலவரத்தை தொடங்கியது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து 18-9-2002ல் ஒரு விவசாயி கபினி அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதன் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.


அதைத்தொடர்ந்து நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றம் கடந்த 5-2-2007ல் இறுதி தீர்ப்பை அளித்தது.

பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு காவிரி நடுவர் மன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

இதன்படி தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீர் கர்நாடகம் வழங்க வேண்டும். (இதில் 7 டிஎம்சி நீரை தமிழகம் புதுவைக்கு வழங்க வேண்டும்.) கேரளாவுக்கு 30 டிஎம்சி வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

 இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மீண்டும் வன்முறையில் இறங்கியது. பிப்ரவரி 12ம் தேதி கர்நாடகாவில்  நடத்தப்பட்டது.

 18-3- 2007ம் தேதி, அப்போதைய தமிழக எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார்.

 அதன் காரணமாக, இந்த தீர்ப்பு  ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதன்படி, இனி வருடந்தோறும் 192 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என தமிழக விவசாயிகள் நம்பினர். ஆனால், கர்நாடகா மீண்டும் வஞ்சித்தது.

வழக்கம் போல இன்று வரை தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தே வருகிறது.

இதற்கு காரணம் மத்தியிலும், கர்நாடகத்திலும் அட்சி செய்தவர்களும், செய்கிறவர்களும் தான் என்பது தஞ்சை விவசாயிகளின் குற்றச்சாட்டு.

இதற்கிடையே கர்நாடகா தனது பாசன பரப்பை பல மடங்கு பெருக்கி விட்டது. பல அணைகளையும் கட்டி காவிரி நீரை முழுமையாக பயன்படுத்தி வருகிறது.

போதாக்குறைக்கு மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் புதிய அணைகளை கட்டவும் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட வேண்டிய நீரளவு (டிஎம்சி) குறித்து விவரமாக  அட்டவணையிட்டது.

அதே நேரத்தில் ஒரு  வருடத்தில் பெறப்படாத நீரை அடுத்த வருடம் கேட்க

இதை கர்நாடகம் விடாப்பிடியாக எதிர்த்து வருகிறது.. தமிழகமும் கர்நாடகமும் இத்தீர்ப்பில் குறைகண்டு, உச்சநீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தன.

இதனைத்தொடர்ந்து கேரளா, புதுச்சேரி அரசுகளும் அப்பீல் செய்தன. இந்த வழக்குகள் தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வராய் ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. 

கர்நாடகம் சார்பில் பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன், ஷியாம் திவான், மோகன் , ஷரத் ஜாவ்ளி வாதிட்டனர்.

தமிழகம் சார்பில் மூத்த வக்கீர்கள் சேகர் நாப்தே, ராகேஷ் திவிவேதி,  வக்கீல்கள் உமாபதி, சி.பரமசிவம், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகி தமிழகத்தின்  கோரிக்கைகளை எடுத்து திறமையான வாதிட்டனர். 

கேரளா சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தாவும், புதுவை சார்பில் மூத்த வழக்கறிஞர்  நம்பியார் ஆகியோர் ஆஜரானார்கள்.

 இந்த விவாதத்தின்போது, காவிரி பிரச்னைக்கு முக்கிய காரணமான, காவிரி மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கவில்லை என மத்திய அரசை காட்டமாக கேட்டார்.  அதுகுறித்து விளக்கமும் பெறப்பட்டது.

அதே நேரத்தில், கர்நாடகத்தில் அணை கட்டுவதை ஏன் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.  

இந்த வழக்கின் விசாரணை  கடந்த வருடம் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கி  செப்டம்பர் 20ம் தேதியுடன் முடிந்தது.

வழக்கின் விசாரணையின்போது,  ‘காவிரி வழக்கில் தொடர்புடைய அனைத்து மாநில விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு நல்ல முடிவை எட்ட வேண்டும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த பிரச்சினையில் அனைத்து தரப்பினரின் வாதத்தையும் பரிசீலிக்க வேண்டும் என்றும்,  இதேபோல மத்திய நீர் ஆணையம், நிபுணர் குழு, நீர்வளத்துறை ஆகியவற்றின் கருத்தை கேட்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்த வழக்கில்  மத்திய அரசின் வழக்கறிஞர்,  காவிரி மேலாண்மை வாரியம் குறித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகார முள்ளது, காவிரி நடுவர்மன்றம் ஆலோசனை மட்டும் வழங்கலாம் என்று வாதிட்டடார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,  2013ம் ஆண்டு அரசாணை வெளியிட்டும் இதுவரை நடுவர் மன்றம் அமைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர்.

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்தது தவறான அணுகுமுறை என்றும்,  மேலும் இந்த பிரச்சினையில்  இரண்டு மாநிலங்களுக்கும் இடையே சுமுக தீர்வு காண மத்திய அரசு வழிவகை செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியது.

காவிரி  நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

விசாரணையின்போது   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது ஏன் என்று மத்திய அரசுக்கு  கேள்வி எழுப்பி அதற்கு சட்ட ரீதியிலான விளக்கம் தேவை என்றும்  உத்தரவிட்டனர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது,.

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா நீர் மேலாண்ம நிபுணர்கள் ஆஜராக வேண்டும் எனவும்,  ஒவ்வொரு நிபுணருக்கும் வாதங்களை முன்வைக்க 45 நிமிடங்கள் வழங்கப்படும் எனவும், அவர்களின் வாதம்  அறிவியல் பூர்வமானதாக இருக்க வேண்டும் நீதிபதிகள் கூறினர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, விசாரணையின்போது தமிழக அரசு சார்பில்,   காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின்  எந்த உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றுவது கிடையாது என்றும்,  காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ள தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை எனில், தமிழகம் அழியும் அபாயம் உள்ளதாக,  தமிழக அரசு முறையிட்டது.

இந்த வழக்கில் தமிழகம், கர்நாடக, புதுச்சேரி  உள்பட அனைத்து மாநிலங்களும் வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, அக்டோபர் 5ந்தேதி,  4 ஆயிரம் பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு  தாக்கல் செய்தது.

அதில், தமிழகத்திற்கு கூடுதலாக 72 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்றும்,காவிரி டெல்டாவின் நிலத்தடி நீரை கணக்கில் எடுத்து கொள்ள கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளது.

மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் எனவும்  தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுபோல கர்நாடகா, புதுச்சேரி சார்பிலும் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பரபரப்பான இந்த வரலாற்று சிறப்பு மிக்க வழக்கில் இன்று  தீர்ப்பு வெளியாகிறது…