டில்லி:
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஆதரவான கட்சியை தடை செய்ய கோரி கேரளா மத்திய அரசை வலியுறுத்தி உள்ளதாக மத்திய இணை அமைச்சர் கிரிண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி ஈடுபட்டு வருவதாகவும், அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்று கட்சி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் இந்த கட்சியின் செயல்பாடு சட்டவிரோதமாக இருப்பதாக கேரள அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் மத்திய பிரதேசத்தின் தெக்கன்பூரில் வருடாந்திர மாநில டிஜிபிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள், அனைத்து மாநில காவல்துறையை சேர்ந்த டிஜிபிக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தும், பயங்கரவாத இயக்கள் ஊடுருவல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கூட்டத்தில் கலந்துகொண்ட கேரள டிஜிபி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது தடை விதிக்க கோரி வலியுறுத்திய தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, கேரள டிஜிபி லோகநாத் பெஹரா, கேரள மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கை குறித்து பேசினார். மேலும், அந்த கட்சியின் குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து மூத்த பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் பட்டியலிட்டதாகவும், அந்த கட்சியை உடனே தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.
அவரின் கோரிக்கை குறித்து பரிசீலித்து வருவதாகவும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அந்த கட்சியை சட்ட விரோத கட்சி என்றும் அறிவிக்க தேவையான ஆதாரங்கள் குறித்து து மத்திய பாதுகாப்பு துறையும் தகவல்களை சேகரித்து வருவதாகவும், அவர் கூறினார்.
மேலும், ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள சிமி (Students’ Islamic Movement of India) மற்றும் இந்தியன் முஜாகிதீன் பயங்கர வாத இயக்கம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.