லண்டன்:

விஜய் மல்லையாவின் வாராந்திர சொகுசு வாழ்க்கைக்கு ரூ. 16 லட்சம் செலவு செய்ய லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சிங்கப்பூர் விமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு ரூ.579 கோடி அபராதம் விதித்து லண்டன் உயர்நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் உத்தரவிட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மல்லையாவின் ஜாலி வாழ்க்கை கூடுதல் செலவு செய்து கொள்ள லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய வங்கிகளில் இருந்து 9 ஆயிரத்து 800 கோடி ரூபாயை கடனாக வாங்கிக் கொண்டு, அதை திருப்பி செலுத்தாமல் நாட்டில் இருந்து தப்பிச் சென்று லண்டனில் மல்லையா வசித்து வருகிறார்.

இதனால் அவரது சர்வதேச சொத்துக்கள் பெங்களூரு நீதிமன்ற உத்தரவு மூலம் முடக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மல்லையா லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்பு வாரத்துக்கு ரூ.4.5 லட்சம் மட்டுமே செலவு செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதை ரூ. 16 லட்சமாக உயர்த்தி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையானது பிரிட்டன் பள்ளி கல்வி முடித்துவிட்டு பணியில் சேரும் ஒரு இளைஞருக்கு வழங்கப்படும் ஆண்டு சம்பளமாகும்.

‘‘சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த மல்லையாவை திடீரென வாரத்துக்கு ரூ.17 ஆயிரத்தில் வாழ வேண்டும் என்று கூற முடியாது. அதோடு வழக்குகளுக்கு அதிக செலவு செய்து வருகிறார்’’ என்று மல்லையாவின் வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.