டில்லி:
இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சில தினங்களில் பாகிஸ்தானை பாராட்டி பேசிய மணி சங்கர் அய்யரை கைது செய்ய வலியுறுத்தி பாஜக தலைவரும் உச்சநீதிமன்ற மூத்த வக்கீலுமான அஜய் அகர்வால் புகார் அளித்துள்ளார்.
பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த காரணத்தால் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மணி சங்கர் அய்யர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மணிசங்கர் சமீபத்தில் பாகிஸ்தான் சென்றிருந்தார். அங்கு கராச்சியில் அவர் பேசினார். பின்னர் பாகிஸ்தான் சென்று வந்த அனுபவம் குறித்து மணி சங்கர் அய்யர் கூறுகையில், ‘‘நான் அமைதி குறித்து பேசியதால் பாகிஸ்தான் மக்கள் என்னை பாராட்டினர். அதனால் அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனக்கு யார் என்று தெரியாத ஆயிரகணக்கான மக்கள் என்னை ஆதரித்தனர். ஆண், பெண், குழந்தைகள் என்னை கரகோஷத்துடன் வரவேற்றனர்.
பாகிஸ்தானில் இருந்து எனக்கு கிடைத்த அன்பை விட இந்தியாவில் இருந்து எனக்கு வெறுப்பு தான் அதிகம் கிடைக்கிறது. அரசாங்கம் எதையும் மாற்றிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் நான் மக்களை நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் சுஞ்சவான் ராணுவ முகாம் மீது கடந்த 10ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் மணி சங்கர் அய்யர் இவ்வாறு பாகிஸ்தான் மக்களை பாராட்டி பேசியுள்ளார். அதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அஜய் அகர்வால் புகார் அளித்துள்ளார்.