கேப்டவுன்,
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியினர் தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு இரு அணியினருக்கும் இடையே 3 டெஸ்ட் மேட்ச், 6 ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது.
கடந்த 1ந்தேதி முதல் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிகாவில் உள்ள கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதையடுத்து கடந்த 4ந் தேதி நடைப்பெற்ற இரண்டாவது போட்டியிலும் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை சுவைத்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.
அதைத்தொடர்ந்து 4வது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற 5வது ஒரு நாள் போட்டியில் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது.
நேற்றைய ஆட்டத்தின்போது, டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் மார்கிராம் பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியினர் பேட்டிங்கில் களமிறங்கினர்.
தொடக்க ஆட்டக்காரர்களாக தவான், ரோகித் சர்மா ஆகியோர் இணை தங்களது திறமையை காட்டத் தொடங்கினர்.ரோகித் சர்மா நிதானமாக விளையாட, தவான் அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டார்.
இதையடுத்து, தவான் 23 பந்தில் 8 பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் கடந்த சில மேட்ச்களில் சரியாக விளையாடாத ரோகித் சர்மா நேற்று நின்று விளையாடினார்.
ரோகித் சர்மா 107 பந்தில் 100 ரன் எடுத்து சதம் அடித்தார். இது ரோகித் சர்மாவின் 17-வது சதமாகும். அவர் 126 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 115 ரன்கள் சேர்த்தார்.
அவரை தொடர்ந்து களமிறிங்கிய ஹர்திக் பாண்டியா, தனது ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், முதல் பந்திலேயே வெளியேறினார். அதையடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் 30 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அதையடுத்து தோனி களமிறங்கினார். ஆனால் அவரும் 13 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். புவனேஸ்வர் குமார் கடைசி வரை நின்று 19 ரன்கள் அடிக்க இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்தது.
இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டடது.. அதைத்தொடர்ந்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்ரிக்கா அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாசிம் அம்லாவும், எய்டன் மார்க்ரமும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர். மார்க்ரம் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டுமினி 1 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் அம்லா உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். பெலுக்வாயோ ரன் எடுக்காமலும், ரபாடா 3 ரன்னிலும், கிளாசென் 39 ரன்னிலும், ஷம்சி ரன் எடுக்காமலும், மோர்னே மார்கல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தென்னாப்பிரிக்க அணியின் மோசமான ஆட்டம் காரணமாக 201 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் காரணமாக இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது
. இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், பாண்டியா, சஹால் ஆகியோர் 2 விக்கெட்களும், பும்ரா ஒரு விக்கெட்களும் வீழ்த்தினர். இந்திய அணியின் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தென்ஆப்ரிக்கா மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்வது இதுவே முதல்முறையாகும். இந்த வெற்றியின் மூலம் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 16-ம் தேதி அன்று செஞ்சூரியன் பகுதியில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.