புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. அவற்றை ஜல்லிக்கட்டு வீரர்கள் அடக்கி பரிசுகளை பெற்றனர்.

வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வழக்கமாக இங்கு 7 வாடிவாசல் அமைக்கப்பட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும். பாதுகாப்பு காரணங்களால் ஒரு வாடிவாசல் மட்டுமே இந்த முறை அமைக்கப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘கொம்பன்’ என்ற காளை இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டது. வாடிவாசலில் இருந்து கொம்பன் அவிழ்த்துவிடப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த காளை வாடிவாசல் வெளியே இருந்த சுவற்றில் மோதி அங்கேயே மயங்கி விழுந்தது.

தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். எனினும் சிறிது நேரத்தில் காளை பரிதாபமாக உயிரிழந்தது. காளை இறந்த விஷயம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.