டில்லி:

அவுரங்கசீப் ஒரு ‘‘தீவிரவாதி’’ என்றும், அவரது சகோதரர் தாரா ஷிகோ அமைதியின் தூதர் என்று பாஜக எம்.பி. மகேஷ் கிரி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த இந்த மொகலாய மன்னர் அவுரங்கசீப் மற்றும் அவரது சகோதரர் தாரா ஷிகோ தொடர்பான ஓவியக் கண்காட்சி தொடக்க விழாவில் கலந்து கொண்ட பாஜக எம்.பி. மகேஷ் கிரி பேசுகையில், ‘‘அவுரங்கசீப் ஒரு ‘‘தீவிரவாதி’’. ஆனால் அவருக்கு அதற்குரிய தண்டனை கிடைக்கவில்லை. அவுரங்கசீப் சாலைக்கு வேறு பெயராவது என்னால் சூட்ட முடிந்தது.

இந்த சாலையைக் கடக்கும் போது நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். கொடுங்கோல் மன்னரின் பெயரை சாலைக்கு சூட்டியது இந்தியாவின் விருப்பத்திற்கு எதிரானது. அதனாலேயே அந்த பெயரை மாற்றி அப்துல் கலாம் பெயரை சூட்டினேன். இதற்காக எனக்கு மிரட்டல்கள் வந்தன. எனினும் விடாமல் முயற்சி செய்து வெற்றி கண்டேன்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘பள்ளி வரலாறு பாடத்தில் அவுரங்கசீப் மட்டுமின்றி தாரா ஷிகோ குறித்தும் கற்பிக்க வேண்டும். அவுரங்கசீப் மக்களை வதைத்தார். ஆனால் தாரா ஷிகோ இஸ்லாம் கற்பித்த கோட்பாடுகள் படி வாழ்ந்தார். இதர மதத்தினருடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினார்’’ என்றார்.