டில்லி:
பாஜக எம்.பி.க்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, எம்.பிக்கள் கிராமங்களுக்கு சென்று, மக்களிடம் தற்போதைய பட்ஜெட்டில், கிராம மக்கள் மற்றும், விவசாயகளுக்கு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கி பேசுங்கள் என்று கூறினார்.
பிரதமரின் மோடியின் கவர்ச்சிகரமான வாய்ஜாலத்தின் காரணமாக பல சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள திரிபுரா மற்றும் மேகாலயா மற்றும் நாகலாந்து தேர்தலை முன்னிட்டு பாஜ எம்பிக்களிடையே மோடி, கிராம மக்களை எம்.பி.க்கள் சந்திக்க வேண்டும் என்று கூறினார்.
நேற்று, பாலஸ்தீனம், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் பிஜேபி பாராளுமன்றக் கட்சி கூட்டத்தில் மோடி உரையாற்றினார். அப்போது, பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் கிராம மக்கள் மற்றும், விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் தெரிவிக்க, எம்.பி.க்கள் தங்களது தொகுதிக்கு செல்ல வேண்டும் என்றும், பட்ஜெட்டின் நலன்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பிரபலப்படுத்திய ‘டிஃபின் பைத்தாக்’ (tiffin baithaks) நடத்தி மக்களிடையே அரசின் திட்டங்களை கொண்டுசெல்ல வேண்டும் என்றும் கூறினார்.
(டிபின் பைத்தாக் என்ற ஆர்.எஸ்.எஸ் திட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரும் தாங்கள் ஏதாவது ஒரு தின் பண்டம் கொண்டு வர வேண்டும். அதை அனைவருடனும் சாதி மத பேதமின்றி பகிர்ந்துகொள்வதாக கூறப்படுகிறது)
இந்த கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, எம்.பி.க்களுக்கு சில நடைமுறை ஆலோசனைகளை வழங்கினார்.
அவர் பேசியதாவது, பல்வேறு அரசு திட்டங்களை பற்றி மக்களுக்கு எம்.பி.க்கள் தெரிவிக்கும் போது கவனமாக பேச வேண்டும் என்றும், பேசும் நபர், உயரடுக்கு மக்களுக்கான திட்டங்கள் குறித்து அங்கு பேசக்கூடாது என்றும், அதுபோல, ‘ஸ்மார்ட் நகரங்கள்’ பற்றி விவாதிக்க வேண்டாம் என்று பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி பேசியபோது காங்கிரசார் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரபலப்படுத்துவதற்காகவே, மோடி பேச்சின்போது இடையூறு செய்தனர் என்றும், அது ஜனநாயகமற்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதைத்தொடர்ந்து, பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகளை உள்ளடக்கிய ஒரு புத்தகம் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டது.