ட்டிகேரியா  நோய் குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

அட்டிகேரியா என்ற தோல் அலர்ஜி பரவலாக காணப்படுகிறது. அதாவது பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.

பலருக்கு இந்த நோய் வந்திருந்தாலும்  பெயர் என்ன என்பது தெரியாது. பொதுவாக ஸ்கின் அலர்ஜி என்று கூறுவார்கள்.

இதையே கிராமங்களில் கானங்கடி, பூரான்கடி என்பர். அதாவது குறிப்பிட்ட பூச்சிகள் கடித்து தோலில் தடிப்புகள் ஏற்படுகின்றன என்பது அவர்களது நம்பிக்கை.

இது தவறு. அட்டிகேரியா என்பது தோல் அலர்ஜி. இதற்கு வித்தியாசமான ஒரு தன்மை உண்டு. தோல் வியாதிகள் எதுவும் சட்டென வந்து சட்டென மறையாது. ஆனால் அட்டிகேரியா இப்படி வரும்.

இது மிகுந்த அரிப்புடன் தட்டைதட்டையான வடிவத்தில் தோலில் ஏற்படும்.   ஒருசில மணி நேரங்களில் பழைய இடங்களில் மறைந்து, புதுப்புது இடங்களில் தோன்றும்.

ஆகவே இதை செல்போனில் படம் எடுத்து மருத்துவர்களிடம் காண்பிப்பார்கள், பாதிக்கப்பட்டோர்.

ஒரு சிலருக்கு உதடு வீங்கிவிடுவதும் உண்டு.  வீக்கம் அதிகமாக ஏற்பட்டு சிலருக்கு முகம் பூசணிக்காய் போன்று உப்பி விடும்.

இந்நோய், ஆஸ்துமா, தும்மல் அலர்ஜியின் பங்காளி வியாதி.

இந்த அட்டிகேரியா ஏன் வருகிறது?

முதலில் இந்த நோயின் பெயரை  நோயாளியின் மனதில் பதிய வைக்கவே பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். பின்னர் ஏன் இந்த நோய் வருகிறது என்பதைப் புரியவைக்க வேண்டும்.

அட்டிகேரியா, ஹிஸ்டமின் [histamine] மாஸ்ட் செல்ஸில்  இருந்து அதிகமாக வெளிவரும் போது ஏற்படுகிறது. மாஸ்ட் செல்லிற்கு நிறைய நல்ல வேலை உள்ளது. ஆனால், கொஞ்சம் தொட்டால் சிணுங்கி. இந்த செல்லை தொட்டாலே போதும்.. திமிறி எழும்.

அட்டிகாரியா இரண்டு வகைப்படும்;

ஒன்று குறுகியகாலம் [6 வாரம்] உள்ளது. மற்றொன்று நீண்டகாலம் [6வாரத்திறு மேல்] உள்ளது.

1] குறுகிய காலம் உள்ள அட்டிகேரியா. நமது உடல் நிலை சரியில்லாத போதோ  [இருமல், சளி]  ஒரு சில வலி மாத்திரை சாப்பிடும் போதோ ஒவ்வாமை உள்ள  உணவு  சாப்பிடும்போதோ வரலாம்.

2] நீண்ட காலம உள்ள அட்டிக்காரியா உள்ளவர்களுக்கு மேலே கூறப்பட்ட எந்த காரணமும் இருக்காது. தானாகவே வரும். தானாகவே  போகும். எத்தனை நாட்கள் இருக்கும் என கூற இயலாது.  பொதுவாக  85% பேருக்கு  ஒரு வருடத்தில்   மறையும்.

இது ஏன் வருகிறது?

நம் உடலில் உள்ள  நோய் எதிப்புசக்தி சில சமயம் மாஸ்ட் செல்லை சீண்டி விடும்.  அதனால் அரிப்பு நீண்ட நாட்கள் வரலாம்.

உடல் வலி மாத்திரையை உட்கொண்டால் அரிப்பு அதிகம் வர வாய்ப்பு உள்ளது. நீண்ட காலம் அட்டிகேரியா உள்ளவர்களுக்கு தைராய்டு பிரச்னை இருக்கும் வாய்ப்பு அதிகம்… சோதனை செய்துகொள்வது அவசியம்.

சிலருக்கு அதீத உடல்பயிற்சி மூலமோ, அழுத்தம் மூலமோ, குளிர்மூலமோ [ஏ சி]  சூரிய ஒளி மூலமோ வர வாய்ப்பு உள்ளது.

 

தீர்வு என்ன?

குறுகிய காலம் உள்ள  அட்டிகேரியா தூக்கம் வராத ஆண்டிஹிட்டமின் மாத்திரைகளை ஒருசில  வாரம் சாப்பிட்டால் மறையும்.

நீண்டகாலம் அட்டிகாரியா உள்ளவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டிவரும். அரிப்பு மிக அதிகமாக இருந்தால்,  தினமும் இரண்டு மூன்று மாத்திரை சாப்பிட வேண்டியது வரலாம்.

ஸ்டீராய்டு [steroid]  மாத்திரை ஒரு வாரம் மட்டும் காட்டுப்பாட்டில் இல்லை என்றால் மருத்துவர் ஆலோசனைக்குப் பிறகு சாப்பிடலாம்.  ஸ்டீராய்  மாத்திரை எக்காரணம் கொண்டும் நீண்ட நாட்கள் சாப்பிடக் கூடாது. தூக்கம் வராத ஆண்டி ஹிஸ்டமின் நீண்ட நாள் சாப்பிட்டாலும் பக்கவிளைவு கிடையாது. இந்த நோய் உள்ளவர்களுக்கு ஏகப்பட்ட சந்தேகம் வரும் அவர்கள் நிச்சயமாக கேள்விகளைக் கேட்கலாம்.

தொடர்ந்து சொல்கிறேன்.