டில்லி:
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் மத்திய சுகாதாரத்துறை எடுத்துள்ள நடவடிக்கை குறித்த் 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் கெடு விதித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக ஆயிரகணக்கானோர் மரணத்தை தழுவி உள்ளனர்.
தமிழகத்திலும் டெங்கு பாதிப்பு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
ஏற்கனவே நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதுகுறித்து ஆலோசனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், டெங்கு குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, கடந்த 12ந்தேதி டெங்கு ஒழிப்பு குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சக ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை 3 வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.