டாவோஸ், சுவிட்சர்லாந்து
சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள உலக பசுமை நாடுகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 177 ஆம் இடம் கிடைத்துள்ளது.
சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்றது. அப்போது உலக பசுமை நாடுகள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலில் இருந்த 180 நாடுகளில் இந்தியா 177 வது இடத்தில் வந்து மிகவும் பின் தங்கி உள்ளது. இதற்கு முன்பு வெளியான தரவரிசைப் பட்டியலில் 141 ஆம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது கடைசி மூன்று இடங்களில் உள்ளது.
இந்த பின்னடைவுக்கு காற்று மாசுபாட்டைக் கையாளுதல், வனங்கள் பாதுகாப்பு ஆகிய இனங்களில் இந்தியா மோசமாக உள்ளது தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், மால்டா, சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளன. கடைசி 5 இடங்களில் இந்தியா, வங்க தேசம், நேபாளம், காங்கோ, புருண்டி ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த அறிக்கையில், “உலக அளவில் பொதுச் சுகாதாரத்திற்கான சுற்று சூழலுக்கு காற்றின் தரம் அச்சுறுத்தல் அளித்து வருகிறது. காற்று மாசுபாட்டினால் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் குடிநீர், சுகாதாரம் போன்றவை உலகளாவிய முன்னேற்றம் அடைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.