லக்னோ:
தாஜ்மகால் விரைவில் தேஜ் கோயிலாக மாறும் என்று பாஜக எம்பி வினய் கட்டியார் பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
பாஜக, இந்துத்வா அமைப்பினர் பலர் தாஜ்மகால் இந்து கோயில் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது பாஜக எம்.பி. ஒருவரும் இத்தகைய கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
உ.பி. மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் வளாகத்தில் ‘தாஜ் மஹோத்தவ்’ என்ற விழாவை அந்த மாநில அரசு சார்பில் 18ம் தேதி முதல் நடக்கிறது. இந்நிலையில் உ.பி.யை சேர்ந்த பாஜக எம்.பி வினய் கட்டியார் பேசுகையில், ‘‘தாஜ்மகால் முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்திற்கு முந்தையது. அப்போது இது தேஜ் கோயிலாக இருந்தது. அந்த கோயிலை அவுரங்கசீப் மயானமாக மாற்றினார்.
எனினும் மக்கள் மனதில் அது சிவாலயமான தேஜ் கோயிலாகவே உள்ளது. அதனால் இதற்கு விழா எடுப்பது தவறல்ல. எங்களுக்கு தாஜ்மகாலும், தேஜ் கோயிலும் ஒன்று தான். அது விரைவில் கோயிலாக மாறும்’’என்றார்.