திருச்சூர்
தனக்கு ரெயிலில் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை பிடிக்க யாரும் உதவவில்லை என நடிகை சனுஷா கூறி உள்ளார்.
நடிகை சனுஷா ரேணிகுண்டா என்னும் தமிழ்ப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். கொடிவீரன், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நட்ட்த்ள்ளார். நேற்று இரவு அவர் மாவேலி விரைவு ரெயிலில் திருவனந்தபுரத்துக்கு பயணம் செய்துள்ளார்.
அப்போது இவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உடன் பயணித்த ஆண்டோ போஸ் மீது புகார் அளித்துள்ளார். அதையொட்டி அவரை திருச்சூர் ரெயில்வே போலிசார் கைது செய்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் நடிகை சனுஷா பேசி உள்ளார்.
அவர், “நான் அப்பர் பெர்த்தில் படுத்திருந்த போது யாரோ என் உதட்டின் மீது கைவைத்து தேய்த்தார்கள். நான் அந்தக் கையை பிடித்துக் கொண்டு லைட்டை ஆன் செய்தேன். அந்த நபர் என்னிடம் தன்னை விடுமாறு கெஞ்சியும் கேளாமல் நான் கூச்சல் போட்டேன். என்னுடன் வந்தவர்கள் தவிர வேறு யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை.
என்னுடன் வந்த கதாசிரியர் உன்னி மற்றும் அவர் நண்பர் டிடிஆரிடம் புகார் அளித்துள்ளனர். அவர் திருச்சூர் ரெயில்வே போலீசாரிடம் கூறியதன் பேரில் அவர்கள் பெட்டிக்குள் வந்தனர். நான் விடாமல் அந்த நபரைப் பிடித்துக் கொண்டு போலீசார் திருச்சூர் ரெயில் நிலையம் வந்த பிறகுதான் அவரை விட்டேன். அவர்கள் அவரைக் கைது செய்தனர்.
அவ்வளவு பேர் பயணித்த அந்த ரெயிலில் இந்த இருவரைத் தவிர வேறு யாரும் எனக்கு உதவிக்கு வராதது எனக்கு மிகுந்த மனவேதனை அளித்துள்ளது. சமூகத்தின் மீது எனக்கு நம்பிக்கை முழுவதுமாகப் போய் விட்டது. சமூகவலை தளங்களில் பெண்களுக்கான கொடுமையை எதிர்த்து பதிவிடும் பலரும் நேரில் உதவ முன்வருவது இல்லை.” என மிகுந்த துயரத்துடன் கூறி உள்ளார்.