டில்லி,
இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், நாடு முழுவதும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.
தனி நபர் வருமானத்திற்கான வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்த்த நிலையில், அதுகுறித்த எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனை அமல்படுத்தப்பட்ட பிறகு, வரி வருமானம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள அருண்ஜெட்லி, 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளில் நேரடி வரிகளின் வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு 12.6 சதவிகிதம் இருந்தது தற்போது (ஜனவரி 2018) 18.7 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது சுமார், 85.51 லட்சம் பேர், தங்கள் வருமானத்தை தாக்கல் செய்துள்ளனர் என்றும் இதன் காரணமாக புதியதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றார்.
கடந்த ஆண்டு 6.47 லட்சம் கோடி பேர் வரி செலுத்தியுள்ள நிலையில், தற்போது அது, 8.27 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.