திருவனந்தபுரம்

திருட்டுக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் போலீஸ் காவலில் மரணம் அடைந்தத வழக்கு அவர் சகோதரரின் போராட்டத்தால் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் வருடம் மே மாதம் கேரள மாநிலம் பரசல்லா காவல் துறையினர் ஸ்ரீஜிவ் என்னும் இளைஞரை திருட்டுக் குற்றத்தில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.   இரு தினங்களுக்குப் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணம் அடைந்தார்.   காவல்துறை தரப்பில் ஸ்ரீஜிவ் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் இது காவல்துறையினரால் துன்புறுத்தப் பட்டு மரணம் அடைந்ததாக கூறினார்கள்.   கடந்த 2016ஆம் வருடம் காவல்துறை விசாரணையில் இந்த மரணம் காவல்துறையினரின் கொடுமையால் நிகழ்ந்தது எனவும் விஷம் அருந்தியதாகக் கூறப்பட்டது பொய்யான தகவல் எனவும் தெரிய வந்தது.

அதை அடுத்து  காவல்துறை இயக்குனர் விசேஷ புலனாய்வுக் குழுவிடம் இந்த வழக்கு விசாரணையை அளித்தார்.   அத்துடன் ஸ்ரீஜிவ் குடுமத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை கேரள மாநில அரசால் வழங்கப்பட்டது. ஆனால் அதை ஏற்காத மறைந்த ஸ்ரீஜிவ்வின் சகோதரர் ஸ்ரீஜித் சிபிஐ விசாரணை கோரி கேரள மாநில சட்டசபை முன்பு போராட்டத்தை துவக்கினார்.

சுமார் 783 நாட்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு நடிகர்கள் நிவின் பாலி, டோவினோ தாமஸ்,  பிரகாஷ் ராஜ் மற்றும் பார்வதி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.    தற்போது இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.      இதை அடுத்து ஸ்ரீஜித் தனது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார்.