வெலுகபுடி
ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஒய் எஸ் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருவது தெரிந்ததே. சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயார் என கூறியது ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் வெலுகபுடியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்துக் கொண்டுள்ளார்.
அப்போது சந்திரபாபு நாயுடு, “ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என கூறி உள்ளார். அவர் ஏற்கனவே குடியரசு மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நிபந்தனை இன்றி பாஜகவை ஆதரித்தவர். எனவே அவர் இவ்வாறு சொல்வதில் வியப்பில்லை. இந்த சிறப்பு அந்தஸ்து கோரிக்கைக்காக தனது கட்சி எம் பி க்கள் ராஜினாமா செய்வார்கள் என ஜெகன்மோகன் கூறுகிறார். தன்னை வழக்குகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே இவ்வாறு கூறுகிறார்.
சட்ட விரோதமாக சொத்து சேர்த்து வைத்துள்ளவர்கள் ஜெகன்மோகன் ரெட்டியாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து மக்கள் நலனுக்கு பயன் படுத்த வேண்டும் என நான் மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு சொத்துக்களை பறிமுதல் செய்வதே உண்மையான தண்டனை ஆகும். இதன் மூலம் ஊழலில் ஈடுபடுவோருக்கு அனைத்து சொத்துக்களும் பறிபோகும் என்னும் அச்சத்தில் ஊழலில் ஈடுபட மாட்டார்கள்” என சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்.