சென்னை
உதான் திட்டத்தின் கீழ் விரைவில் சென்னை – தஞ்சாவூர் விமானம் இயக்கப்பட உள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா நகரில் பிரதமர் மோடி உதான் திட்டத்தை துவக்கி வைத்தார். உள்நாட்டு விமானப்போக்குவரத்தை ஊக்குவிக்க அறிமுகப் படுத்தப் பட்ட திட்டமான இந்த உடான் திட்டத்தின் மூலம் சாதாரண மக்களும் விமானப் பயணம் மேற்கொள்ள முடியும்.
ஒரு மணி நேரம் அல்லது 500 கிமீ தூரப் பயணங்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ 2500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது தஞ்சாவூர் மற்றும் சென்னை இடையே விமான சேவை துவங்க உள்ளது. தஞ்சாவூரில் உள்ள விமானப் படை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இந்த விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்ட போது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்த விமானத்தை இயக்க முன் வந்துள்ளது. விரைவில் இந்த சேவை தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள ஓசூர், சேலம் மற்றும் நெய்வேலியிலும் விரைவில் விமான சேவைக்கு தமிழக அரசு மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.