பாட்னா

முன்னாள் பீகார் முதல்வர் லாலுவை குற்றவாளி என அறிவித்துள்ள சிபிஐ யின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாக அவர் மகன்  தேஜஸ்வி கூறி உள்ளார்.

பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி தலவருமான லாலு பிரசாத் மீது நடைபெற்ற இரு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.   இன்று மூன்றாவது மாட்டுத் தீவன ஊழல் வழக்கிலும் சிபிஐ நீதிமன்றம் லாலுவை குற்றவாளி என அறிவித்துள்ளது.

இது குறித்து லாலு பிரசாத் மகனும் பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், “பொதுமக்கள் மனதில் கதாநாயகனாக உள்ள லாலு பிரசாத் பொய்யாக இந்த வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுள்ளார்.   இது முழுக்க முழுக்க நிதிஷ்குமார், பாஜக, மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்புகளின் சூழ்ச்சியே ஆகும்.  பாஜக இந்த வருடம் டிசம்பரில் பீகார் மாநிலத் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ளது.    அந்த தேர்தலில் பாஜக வலுவான கூட்டணி அமைக்கவே லாலு பிரசாத் சட்டச் சிக்கல்களில் மாட்ட வைக்கப் பட்டுள்ளார்.

பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் மாநிலத்தில் அடிக்கடி சுற்றுப் பயணம் செய்து வருவதே இந்த தேர்தலை முன்னிட்டுத்தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் .  பாஜக வுக்கு சரியான பதிலடியை ராஷ்டிரிய ஜனதா தளம் தேர்தலில் அளிக்கும்.    லாலுவின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பு எதுவாக இருப்பினும் இப்போது ஏற்றுக் கொள்கிறோம்.    ஆனால் இது சி பி ஐ வழங்கிய தீர்ப்பு,  இறுதித் தீர்ப்பு இல்லை.  நாங்கள் உயநீதிமன்றத்தில் மட்டும் அல்ல தேவைப் பட்டால் இதற்காக உச்சநீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்ய தயாராக உள்ளோம்”  எனக் கூறி உள்ளார்.