சென்னை:
அண்ணாதான் தங்கள் கடவுள் என்று தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கட்சியில் இருந்து விலகிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று தி.மு.க.வில் இணைந்தனர். அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்ச்சி, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
அப்போது அவர் பேசியதாவது:
“எந்த தீய சக்தியாலும் தி.மு.க.வை அழிக்க முடியாது.
தி மு க விரைவில் ஆளும் கட்சியாக மாறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை
அதே நேரம், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி தி.மு.க.தான்.
சட்ட மன்ற உறுப்பினர்கள் வழக்கில் வர போகும் தீர்ப்பு தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தும்.
ஆளும் அ.தி.மு.க. அரசு, ஒரே இரவில் பேருந்து கட்டணத்தை கடுமையாக உயர்த்தி மக்களை இன்னலுக்கு ஆளாக்கி உள்ளது. இது பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை விட மோசமான செயல்.
இந்த கட்டணம் உயர்வை27 ஆம் தேதிக்குள் திரும்ப பெறாவிட்டால் மாபெரும் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும்” என்றார்.
மேலும் அவர் பேசும்போது, “எந்த கொம்பனாலும் திராவிட இயக்கத்தை தொட்டுக்கூட பார்க்க முடியாது
கடவுள் என்று ஒன்று இருக்குமானால் அது நமக்கு பேரறிஞர் அண்ணா தான். தி.மு.க.வினருக்கு அண்ணா பிறந்த காஞ்சிபுரம் தான் ஆலயம். அங்கு பிறந்த அண்ணா தான் தெய்வம்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.