டில்லி,
பத்மாவத் படத்துக்கு வட மாநிலங்களில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் தியேட்டர்கள் சூறையாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பத்மாவத் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
பத்மாவதி திரைப்படத்துக்கு பாஜக ஆளும் மாநிலங்களில், படம் வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், உச்சநீதி மன்றம் தடை அகற்றி படத்தை வெளியிட உத்தரவிட்டிருந்தது. வரும் 25ந்தேதி படம் வெளியாக இருந்த நிலையில், வட மாநிலங்களில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பிரச்சினை வெடித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது எனவும் நாடு தழுவிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்களும், தீ வைப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றனர்.
மேலும் ராஜபுத்திர பெண்கள், பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்தால், தங்கள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்வதாக, கையில் வாளுடன் பெண்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இதே போன்று சித்தூர்கர் பகுதியில் தீயில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக 1908 பெண்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். சித்தூர்கர் கோட்டையை நோக்கி கண்டன பேரணியும் நடத்தபடுகிறது.
இதுபோன்ற சூழலில், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ராஜஸ்தான், மத்திய பிரதேச உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீடு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் இன்று விசாரணை எடுத்துக்கொள்கிறது.
இந்த தகவலை ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப் சாந்த் கதாரியா தெரிவித்துள்ளார்.