சென்னை :

மிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள  கோயில்களில் இருந்து 1262 சிலைகள் மாயமாகி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 529 கோயில்கள் இருக்கின்றன.  இக் கோயில்களில் பழமையான கற் சிலைகள், ஐம்பொன் சிலைகள் என லட்சக்கணக்கில் உள்ளன.

இந்த சிலைகள் குறித்த முழு விவரங்களும் இணை ஆணையர் அலுவலகத்திலோ, அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்திலோ இல்லை என்று சொல்லப்படுகிறது.  சிலைகள் குறித்த விவரங்கள் கடந்த காலங்களில் அந்தந்த கோயில்களில் உள்ள கோப்புகளில் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த சிலைகளுக்கு வெளிநாடுகளில் பெரும் விலை கிடைக்கும் அதிகம் என்பதால் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் சிலர், அவற்றை கடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

 

இதற்கு கோயில் ஊழியர்கள் சிலரும் உடந்தையாக இருந்தனர்.

இந்த நிலையில், கோயிலில் உள்ள சிலைகளை கணக்கெடுக்க அறநிலையத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து  கடந்த 2015ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 4.3 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இதில், பெரும்பாலான கோயில்களில் பாதுகாப்பு வசதி இல்லை. அாகவே  அந்த கோயில்களில் சிலைகள் காணாமல் போவது தற்போது வரை தொடர்கிறது.

இது குறித்து  கோயில் நிர்வாகம் சார்பில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு  புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த காலங்களில் மட்டும் 409 கோயில்களில் இருந்து சிலைகள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருக்கின்றன.  அதன்படி, 391 கற்சிலைகளும், 871 உலோக சிலைகளும் காணாமல் போய் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இவற்றில்  தற்போது 5 கற்சிலைகள், 56 உலோக சிலைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

அறநிலையத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது,  “கோயில்களில் சிலைகள், உண்டியல் திருடப்படுவதை தடுக்க அலாரம், கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது” என்கிறார்கள்.

பக்தர்கள் இது குறித்து வருத்தம் தெரிவிப்பதோடு, “ஆன்மிகப்பெரியவர்கள் பலர் எது எதற்கோ தேவையில்லாமல் போராடுகிறார்கள். உண்மையில் அவர்கள் போராட வேண்டிய விசயம் இதுதான். மீத முள்ள சிலைகளையாவது நாம் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர்.