டில்லி:
சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத அந்நிய முதலீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக.வின் கெடுபிடி ஆகியவற்றை கண்டித்து வரும் 23ம் தேதி டில்லியில் ஒரு நாள் பந்த் நடைபெறும் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநில மாநாடு நடந்தது. இதன் பிறகு மூத்த தலைவர் கோபால் ராய் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாஜக ஆளும் உள்ளாட்சி அமைப்புகளில் தொழில் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வேலைவாய்ப்பை பறிக்கும் வகையிலான செயல்பாடுகள் உள்ளது. பூங்கா மற்றும் தர மாற்றம் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த வசூல் தொடர்பாக வர்த்தகர்களுக்கு எந்த தகவலும் இல்லை.
இது போன்ற கட்டணங்கள் விதிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். வரும் 23ம் தேதி வர்த்தகர்களுடன் இணைந்து 70 தொகுதிகளிலும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். அடுத்த கட்டமாக 29ம் தேதி நாடாளுமன்றம் நோக்கிய நடைபயணத்தில் ஆம் ஆத்மி எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், இதர நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள். சில்லரை வர்த்தகத்தில் 49 சதவீத அந்நிய முதலீட்டை காங்கிரஸ் கொண்டு வந்தது. இதை பாஜக 100 சதவீதமாக்கியுள்ளது’’ என்றார்.