சுபா (Subashini Thf) அவர்களின் முகநூல் பதிவு:
தமிழகத்தில் தேவதாசிகள் எனும் இந்த நூல் முனைவர் கே.சதாசிவன் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு கமலாலயன் என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அகநி பதிப்பகத்தின் வெளியீடாக 2013ல் முதல் பதிப்பு கண்டது.
தேவதாசி, தேவரடியார் என்ற சொற்களின் பொருளை அறிந்து கொள்ளும் ஆர்வம் இன்று அதிகரித்திருக்கின்றது. உலகம் முழுவதுமே மக்களின் பண்பாட்டில் ஆணும், பெண்ணும் இறைவனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் நடைமுறை வழக்கில் உள்ளது. இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் பண்ணெடுங்காலமாக இருந்து வரும் இறைவனுக்குத் தம்மை அர்ப்பணிக்கும் பெண்களைப் பற்றிய ஒரு ஆய்வு நூலாக இதனைக் காண்கின்றேன்.
இந்த நூலின் ஆசிரியர் முனைவர் கே.சதாசிவன், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையின் மேனாள் பேராசிரியராக, துறைத்தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த நூலின் முன்னுரையில், தேவதாசி முறை என்பது கி.பி. 6ம் நூற்றாண்டில் வளர்ச்சிகண்ட ஒன்று என்றும், பக்தி இயக்கம் படிப்படியாக செழித்து வளர்ந்த காலத்தில் தங்களை முழுமையாகக் கோயில் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்ட முழுநேரத் தொண்டர்கள் ஆண், பெண் இருபாலரிலும் தேவைப்பட்டமையே இந்த முறை வளர்ச்சி கண்டமைக்குக் காரணம் எனவும் இவர் பதிகிறார்.
தேவதாசிகளின் கோயில் பங்களிப்புக்களும் அவர்களின் ஆளுமைகளும் பெருமைகளும் விரிவாக எடுத்துச் சொல்லப்படும் அதே வேளை, படிப்படியாக அரசுகள் தலையீட்டினாலும் சமூகச்சூழல் மாற்றத்தினாலும் இத்தகைய பெண்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இந்த நூல் விரிவாக விவரிக்கின்றது.
நடனக்கலை வளர்த்த பெண்டிர் எனும் போது, சிந்து வெளி அகழ்வாய்வுகளிலிருந்து இக்கலை வளர்ந்திருக்கலாம் என்பதற்குக் கிடைத்திருக்கும் சான்றுகள் உதவுகின்றன. சிலப்பதிகாரம் மணிமேகலை காலத்தில் நடனமகளிர் பங்களிப்புக்கள், அவர்களின் பங்கு எனவும் ஆய்வுத் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை கண்டெடுத்து படியெடுக்கப்பட்டு வாசிக்கப்பட்ட கல்வெட்டுக்களில், ஏறக்குறைய 500 கல்வெட்டுச் சாசனங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், நேரடி கள ஆய்வும் இந்த நூல் உருவாக்கத்திற்குத் துணை புரிந்துள்ளது. 400 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் தேவதாசி எனும் பெண்பால் கோயிலுக்கான முழு நேரத் தொண்டர்கள் பற்றின பல அம்சங்கள் வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் பதியப்பட்டுள்ளன.
இந்த நூலின் அறிமுகப்பகுதியும் துணை நூற்குறிப்புக்களும் போக, பத்து அத்தியாயங்களில் ஆய்வுக்குறிப்புக்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை:
-தேவதாசி முறையின் தோற்றம்
-தேவதாசி முறையின் மீது ஆகமங்கள் மற்றும் பக்தி இயக்கத்தின் தாக்கம்
-தேவதாசிகளின் வாழ்க்கை
-மேலும் அதிகச் சடங்குகள், மேலும் அதிக தேவதாசிகள்
-கடமைகளும் பரிசுகளும்
-உள்ளார்ந்த முரண்பாடு
-தேவதாசி முறை மீது படிந்த கிரகண நிழல்
-மீளவும் வந்தது இந்த முறை
-சீர்குலைவும் வீழ்ச்சியும்
-தேவதாசி முறையும் தமிழ்நாட்டின் நுண்கலைகளும்
தமிழர் வரலாற்றிலும், பண்பாட்டிலும் கோயிற்கலை என்பது தவிர்க்கப்பட முடியாது ஒரு கூறு. பண்டைய கோயிற்கலை மரபுகளை ஆராய முற்படும் போது தேவதாசி முறையும், கோயில் தொழிலாளர்கள் முறையும் மிக முக்கியமானவை. இவற்றை ஒதுக்கிப் பார்ப்பதோ, தேவதாசி என்ற சொல்லிற்குத் தவறான ஒரு பார்வையை மட்டுமே வழங்கி ஒதுக்குவதோ மிகத் தவறான ஒரு போக்காகும். இன்றைய காலச் சூழலில் மேலெழுந்தவாறியாக மட்டுமே சில செய்திகளைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு கொந்தளித்துச் செல்வது ஒரு அவசர நிலை மனப்பாட்டைத்தான் வெளிப்படுத்துகின்றது. மிக நுணுக்கமான பல கூறுகளை அடித்தளமாகக் கொண்ட தமிழர் பண்பாட்டை புரிந்து கொள்ள ஆய்வுத்துறையில் திறந்த மனம் தான் அனைவருக்குமே அடிப்படை தேவை!