சென்னை,

றைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை தாங்கள் நிர்வகிக்க உரிமை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான ஜெ. தீபா, தீபக் ஆகியோர் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் ஏராளமான சொத்துக்களை சசி குடும்பத்தினர் தங்களது பெயரில் எழுதி வாங்கிவிட்ட நிலையில், அவரது நகைகள் மற்றும் உடமைகள், போயஸ் தோட்ட வீடு போன்ற ஒருசில  சொத்துக்களே அவரது பெயரில் உள்ளது.

ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லையென்பதால், இந்த சொத்துக்களையும் தற்போது சசிகலா குடும்பத்தினரே நிர்வகித்து வருகின்றனர்.

மேலும், ஜெ.வின் போயஸ் தோட்ட இல்லைத்தை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி வருகிறது. இந்நிலையில், ஏற்கனவே ஜெ.தீபா, ஜெ.வின் போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க தங்களுக்கு உரிமை அளிக்க வேண்டும் என்று கோரி புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் கூட்டாக தாக்கல் செய்துள்ள மனுவில்,  ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அவரது சட்டப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்கும்படி தாங்கள் அந்த பகுதி தாசில்தாரரிடம் மனு அளித்தோம். ஆனால், அவர் சான்றிதழ் வழங்க மறுத்து,  நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற்றுக் கொள்ளும்படி கூறி விட்டார். மேலும்,  ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் வேறு எவரும் இல்லாததாலும்,  அவர் தன் சொத்துக்கள் தொடர்பாக எந்தவித உயிலும் எழுதி வைக்காத காரணத்தால், இந்து வாரிசு சட்டப்படி தங்களை அந்த சொத்துக்களுக்கு நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது