காந்திநகர்:

குஜராத் பாஜக எம்எல்ஏ சங்கீத் சாம் என்பவருக்கு விசா வழங்க ஆஸ்திரேலியா மறுப்பு தெரிவித்துள்ளது.


குஜராத் முசாபர் நகரில் 2013ம் ஆண்டு நடந்த வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் சங்கீத் சாம் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்ய விசா மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ அந்த வன்முறை சம்பவத்துக்கு முன்பு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று திரும்பியுள்ளேன். அப்போதெல்லாம் விசா மறுக்கப்படவில்லை. வன்முறை வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டது முதல் இந்த பிரச்னையை எதிர்கொண்டு வருகிறேன்.

நான் முசாபர் நகரை அதிகம் விரும்புகிறேன். இச்சம்பவம் காரணமாக நான் உலகளவில் குறிப்பிடக் கூடிய நபராக மாறியுள்ளேன். அதனால் எனக்கு எந்த நாடும் விசா வழங்க மறுக்கிறது. வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது ஆஸ்திரேலியா விசா வழங்க மறுத்துள்ளது. 2015ம் ஆண்டு முதல் விசா பெற முயற்சித்து வருகிறேன். இதன் பின்னர் நான் வெளிநாடு செல்லும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டேன்’’ என்றார்.

தேர்தலின் போது தன் மீது 5 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், இதிலும் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். 2013ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி ஆத்திரமூட்டும் வகையில் பேசியதற்காக இவர் கைது செய்யப்பட்டார். இந்த பேச்சின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதை 200 பேர் லைக் செய்திருந்தனர். முசாபர் நகரில் நடந்த மோதல் சம்பவத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.